கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலையைச் சேர்ந்த சிவண்ணன், அவரின் மனைவி சபிதா, மகள்கள் ஸ்ருதி, ஸ்ரேயா , தாத்தா பாட்டி ஆகியோர் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
பக்கத்து வீட்டில் சிவண்ணனின் சகோதரர், அவரின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வசித்து வந்தனர். இப்படி 9 பேர் கொண்ட அவர்களது குடும்பத்தில் நிலச்சரிவுக்கு பிறகு இப்போது ஸ்ருதி மட்டுமே மீதமிருக்கிறார்.
ஸ்ருதி கோழிக்கோடு மிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். நிலச்சரிவின் போது, அங்கு பணியில் இருந்ததால் உயிர் தப்பித்தார்.
நிலச்சரிவில் சிக்கி ஸ்ருதியின் குடும்பத்தினர் அனைவரும் இறந்து போனார்கள். அதோடு, ஸ்ருதியின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த 15 பவுன் நகைகள், 4.5 லட்சம் பணமும் மண்ணோடு மண்ணாக புதைந்து போனது.பெற்றோர், சகோதரி உள்பட 9 பேரை பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டிருந்த ஸ்ருதிக்கு ஒரே ஆறுதலாக வருங்கால கணவர் ஜென்சன் மற்றும் அவரின் குடும்பத்தினர்தான் இருந்தனர்.
ஜென்சனுக்கும் ஸ்ருதிக்கும் வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த நிலையில், கல்பெட்டா அருகே நடந்த விபத்தில் ஸ்ருதியின் வருங்கால கணவர் ஜென்சனும் இறந்து போனார்.
இந்த சம்பவம் கேரளத்தை உலுக்கி எடுத்துள்ளது. பல திரையுலக பிரபலங்கள் ஸ்ருதிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.நடிகர் மம்முட்டி, ‘ஸ்ருதிக்கு நடந்த துயரங்கள் கற்பனைக்கு எட்டாதது ‘ என்று தனது இன்ஸ்டா பக்கத்தில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வேதனையை தாங்கிக் கொள்ளும் சக்தியை ஸ்ருதிக்கு இறைவன் கொடுக்கட்டும் என்றும் மம்முட்டி கூறியுள்ளார். அதே போல, நடிகர் பகத் பாசிலும் ஜென்சன் படத்தை பகிர்ந்து’ எப்போதும் நினைவு கொள்ளப்படுவீர்கள் ‘என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ஸ்ருதி ஏற்றுக் கொள்ளவே முடியாத இந்த துயரத்தில் இருந்து மீண்டு வருவார் என்று நம்புவதாகவும் கேரள மாநிலமே அவருக்கு துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். விபத்தில் இறந்து போன ஜென்சனின் உடல் நேற்று (செப்டம்பர் 12) நல்லடக்கம் செய்யப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
Asian Champions Trophy 2024: கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இந்தியா
“தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன்” – பவள விழாவுக்கு ஸ்டாலின் அழைப்பு!