ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22-ம் தேதி மத நல்லிணக்கப் பேரணி நடத்தப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது,
“ஜனவரி 22-ஆம் தேதி நான் ஒரு பேரணி நடத்த உள்ளேன். காளி கோயிலில் பிரார்த்தனை நடத்தியபின், அங்கிருந்து இந்தப் பேரணி தொடங்கப்படும்.
அதையடுத்து ஹசரா முதல் பூங்கா விளையாட்டு மைதானம் வரை இந்த மத நல்லிணக்கப் பேரணி சென்று அங்கு கூட்டம் நடத்தப்படும்.
நாம் செல்லும் வழியில் உள்ள மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் மற்றும் கோயில்களில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்தப் பேரணியில் பங்கேற்பதற்கு அனைவரையும் வரவேற்கிறேன்.
அதே நாளில் பிற்பகல் 3 மணியளவில் எனது கட்சித் தொண்டர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்துவார்கள். அனைத்து மதங்களும் சமமானவையே. எனவே, இந்த பேரணிகளில் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள்.
பண்டிகைகள்தான் மக்களை ஒருங்கிணைக்கும் தன்மை கொண்டது. ஒவ்வொருவரோடும் நாம் பேசக்கூடிய தருணம் அது.
தேர்தலைக் கருத்தில் கொண்டு ராமர் கோயில் விவகாரத்தில் பாஜக என்னவெல்லாம் வித்தை காட்ட நினைக்கிறதோ காட்டட்டும்.
எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், பிற மதங்கள் அவமதிக்கப்படுவதை ஏற்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே பாகுபாடு காட்டப்படுவதை அனுமதிக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வும் ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதனிடையே, “ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முழுக்க முழுக்க மோடியின் அரசியல் விழாவாக மாற்றிவிட்டனர்” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளதும் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையாமல், சிலை பிரதிஷ்டை நடத்த திட்டமிட்டுள்ளதால் சங்கராச்சாரியார்கள் இந்த நிகழ்வினைப் புறக்கணித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!