“பிரதமர் மோடி அடுத்த ஆண்டும் தேசிய கொடி ஏற்றுவார். ஆனால் அதை அவர் வீட்டில் இருந்து தான் ஏற்றுவார்” என்று மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார்.
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 15) நாட்டு மக்களுக்காக டெல்லி செங்கோட்டையில் உரையாற்றினார்.
அப்போது காங்கிரஸ் பெயரை குறிப்பிடாமல் பேசிய மோடி, “கடந்த 75 ஆண்டுகளில் சில கட்சிகள் வாரிசு அரசியலை பின்பற்றி வருகின்றன. மேலும் அவர்களின் கட்சியும் குடும்பத்திற்காகவே உள்ளது” என்று விமர்சித்தார்.
மேலும், “நான் 2014ல் வந்து மாற்றத்தை கொடுத்தேன். 2019ஆம் ஆண்டு எங்களுக்கு மீண்டும் ஆட்சியை அளித்தீர்கள். அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தில் நான் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுடன் பேசுவேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.
பாரம்பரியமிக்க இந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒரு நாற்காலி காலியாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேவேளையில் கட்சி தலைவராக உள்ள மல்லிகார்ஜூனே டெல்லியில் உள்ள தனது வீட்டிலும், பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும் முதன்முறையாக தேசியக்கொடியை ஏற்றினார்.
आज स्वतंत्रता दिवस के अवसर पर कांग्रेस अध्यक्ष श्री @kharge ने AICC मुख्यालय में तिरंगा फहराया। pic.twitter.com/C5ANK4VqeR
— Congress (@INCIndia) August 15, 2023
பின்னர் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மௌலானா ஆசாத், ராஜேந்திர பிரசாத், சரோஜினி நாயுடு மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் போன்ற சுதந்திர போராட்ட தலைவர்களின் உருவப்படங்களுக்கு கார்கே மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் தனது உரையில், “எனக்கு கண் பிரச்சனை இருப்பதால் செங்கோட்டைக்கு செல்ல முடியவில்லை. காங்கிரஸ் அலுவலகத்தில் தலைவர் என்ற முறையில் கொடி ஏற்ற வேண்டிய சூழ்நிலை இருந்தது.
பிரதமருக்கு இவ்வளவு பாதுகாப்பு இருந்தும், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சபாநாயகர் வெளியேறும் வரை மற்றவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாது. எனவே அதில் கலந்து கொள்ள முடியவில்லை” என்றார்.
மேலும் அவர், “நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் தேசத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களித்துள்ளனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் தான் இந்தியா வளர்ச்சி கண்டுள்ளது என்று தற்போது சிலர் திரித்து கூற முயற்சித்து வருகின்றனர்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, ராஜீவ் காந்தி, பி.வி. நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் போன்ற காங்கிரஸ் பிரதமர்களுடன், பாஜகவைச் சேர்ந்த வாஜ்பாய் என ஒவ்வொரு பிரதமரும் தேசத்தைப் பற்றி சிந்தித்து, வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.
அதே வேளையில் நாட்டில் தற்போது ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் தன்னாட்சி அமைப்புகள் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை வேதனையுடன் கூறிக்கொள்கிறேன்.
சிபிஐ, அமலாக்க இயக்குனரகம், வருமான வரித்துறை ரெய்டுகள் போன்றவை எதிர்க்கட்சிகளின் குரல்வளையை ஒடுக்க புதிய கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் ஆணையமும் வலுவிழந்து விட்டது.
மக்களின் மனசாட்சி மேடையாக இருக்கக்கூடிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்களை பேச விடாமல் மைக்குகளை ஆப் செய்வது, அவர்களை சஸ்பெண்ட் செய்வது என ஜனநாயகம் துடைத்தெறியப்படுகிறது.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி), இந்திய மேலாண்மை நிறுவனங்கள் (ஐஐஎம்கள்), எய்ம்ஸ், விண்வெளி மற்றும் அணு ஆராய்ச்சி ஆகியவையின் மதிப்பு தற்போதைய அரசாங்கத்தால் குறைந்துள்ளது.
உண்மையில் தலைவர்கள் எவரும் புதிய வரலாற்றை உருவாக்க கடந்த கால வரலாற்றை அழிப்பதில்லை. ஆனால் தற்போது மோடியின் தலைமையிலான அரசு எல்லாவற்றுக்கும் பெயர் மாற்ற முயல்கிறார்கள்.
கடந்த கால திட்டங்கள், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பெயர் மாற்றி, ஜனநாயகத்தை சர்வாதிகார வழியில் கிழித்தெறிகிறார்கள். தங்களது தோல்விகளை மறைக்க நாட்டில் அமைதியை நிலைநாட்டிய பழைய சட்டங்களின் பெயரை கூட மாற்றுகிறார்கள்.
இந்த சுதந்திர தினத்தில், நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்வோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதனை எதிரொலிக்க செய்வோம்” என்றார்.
இறுதியாக, ”இன்று பிரதமர் தனது உரையில் அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமராக தேசியக் கொடியை ஏற்றி வைப்பதாக கூறியுள்ளார்.
மோடி அவ்வாறு கூறியதில் தப்பில்லை. அவர் அடுத்த ஆண்டும் தேசிய கொடி ஏற்றுவார். ஆனால் அதை அவர் வீட்டில் இருந்து ஏற்றுவார் என்பதை கூறி கொள்கிறேன்” என்று மல்லிகார்ஜூனே பேசியுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டிற்கு தண்ணீர்: பாஜக கோரிக்கையை நிராகரித்த கர்நாடக அரசு
சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!