தி இந்து நாளிதழின் குழும தலைவராக இருந்த பிரபல பத்திரிகையாளர் மாலினி பார்த்தசாரதியின் பதவிகாலம் முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தி இந்து குழும தலைவராக கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்த மாலினி பார்த்தசாரதியின் பதவி காலம் இன்றுடன் (ஜூன் 5) முடிவடைந்தது. இன்று நடந்த வாரிய கூட்டத்தில் புதிய தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமிக்கப்பட்டார்.
அதே சமயம் தி இந்து குழுமப் பதிப்பகத்தின் நிர்வாக குழுவில் இருந்து மாலினி பார்த்தசாரதி விலகியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தி இந்து குழுமப் பதிப்பகத்தின் தலைவராக எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எனது தலையங்கப் பார்வைகளுக்கான இடமும் நோக்கமும் சுருங்கி வருவதால் தி இந்து குரூப் பப்ளிஷிங் பிரைவேட். லிமிடெட் (THGPPL) நிர்வாகக் குழுவில் இருந்தும் விலகுகிறேன். எனது முயற்சிகளுக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், இங்கிருந்து செல்ல முடிவு செய்துள்ளேன். இந்த சவாலான பயணத்திற்கு உறுதுணையாக இருந்த எனது நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் அனுபவம் பெற்றவர் மாலினி பார்த்தசாரதி. தி இந்து நாளிதழின் நிர்வாக ஆசிரியராக மாலினி இரண்டு முறை பணியாற்றியிருக்கிறார். இந்துவில் வெளியாகும் சண்டே ஸ்பெஷல் பொறுப்பாளராகவும் இருந்தார். 2020ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் என்.ராமை தொடர்ந்து மாலினி பார்த்தசாரதி தலைவராக நியமிக்கப்பட்டார்.
தற்போது, புதிய தலைவராக நிர்மலா லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளார். முனைவர் பட்டம் பெற்ற இவர் தி இந்துவின் பல்வேறு வெளியீடுகளுக்கு ஆசிரியர், எழுத்தாளராக பணி புரிந்துள்ளார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகை துறையில் அனுபவம் கொண்டவர்.
முன்னதாக, முன்னாள் தலைவர் என்.ராம் மற்றும் மாலினி பார்த்தசாரதிக்கும் இடையே ஆசிரியர் குழு விவகாரங்களில் முரண்பாடு இருந்து வந்துள்ளது. அது தற்போது நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட செங்கோல் வரை நீடித்தது. 2021 ஆம் ஆண்டு மாலினி பார்த்தசாரதி பிரதமரை சந்தித்ததும் விமர்சனத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
டிஜிட்டல் திண்ணை: ’கூட்டணி’யை வெளிச்சம் போட்டுக் காட்டிய அண்ணாமலை பிறந்தநாள்!
கேரளா டூ தமிழ்நாடு : அரிசிக்கொம்பன் பிடிபட்ட கதை!