மே 5ஆம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் இன்று (ஜூன் 7) ரிட் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், நீட் தேர்விற்கான முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் 4ஆம் தேதி வெளியிட்டது.
இதில், தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருந்தனர். ஆனால், நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 மாணவர்களின் பதிவெண்கள் அடுத்தடுத்து இருந்ததால் தேர்வில் குளறுபடி நடந்திருக்க வாய்ப்புள்ளதாக சக மாணவர்கள் சந்தேகம் எழுப்பினர்.
முன்னதாக, நீட் தேர்விற்கான வினாத்தாள் தேர்விற்கு முன்னதாகவே வெளிவந்த ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், 2வது மற்றும் 3வது இடங்களை பெற்றுள்ள மாணவர்கள் வரிசையாக 719, 718 மதிப்பெண்கள் பெற்றிருப்பதால் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டது.
ஏனெனில், நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறான விடையளித்திருந்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உட்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் வழங்கப்படும். ஆனால், 718, 719 மதிப்பெண்கள் என்பது எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு விளக்கமளித்த தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. இந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யவும், மீண்டும் தேர்வு நடத்தக்கோரியும் மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 7) ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட நீட் தேர்வு முறைகேடு வழக்கினை இன்று விசாரித்த நீதிபதிகள் அபுர்பா சின்ஹா ரே மற்றும் கவுசிக் சந்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தேசிய தேர்வு முகமை 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: நாளை முகூர்த்தம்.. இன்று புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!
Share Market : பதவி ஏற்கும் புதிய அரசு… பங்குச் சந்தை உச்சம் தொடுமா? வீழுமா ?