நம் நாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களை அவ்வளவு எளிதில் சட்ட வளையத்துக்குள் கொண்டு வந்துவிட முடியாது.
யூடியூபர் இர்பான் மாதிரி ஆட்கள் கூட தப்பு செய்து விட்டு மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி விடுவார்கள்.
ஆனால், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் தப்பித்து விட முடியாது.
மன்னிப்பு கேட்டாலும், தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும். வளைகுடா நாடுகளில் இந்த தண்டனை இன்னும் வேறு மாதிரியாக இருக்கும். அப்படிதான், மலேசியாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்னவென்று பார்க்கலாம்?
மலேசிய மாகாணமான நெகேரி செம்பிலானில் செராம்பன் மாவட்டத்தில் ஒரு ஹோட்டலுக்கு வெளியே சேரில் அமர்ந்து அங்கிருந்த நண்பர்களுடன் மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹசன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு அமைச்சருக்குரிய எந்த தோரணையும் அவரிடத்தில் இல்லை. சாதாரணமாக அமர்ந்து பேசிக் கொண்டே சிகரெட் குடித்துக் கொண்டிருந்தார். இந்த பகுதி ஸ்மோக்கிங்கிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும்.
பொது இடத்தில் அமைச்சர் சிகரெட் குடித்த புகைப்படம், இணையத்தில் பரவியது. இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் அகமது , வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஹசனுக்கு 5,000 ரிங்கிட் அதாவது இந்திய மதிப்பில் 95 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
முன்னதாக, பொது இடத்தில் சிகரெட் குடித்த தனது போட்டோ வைரலானதையடுத்து, முகமது ஹசனே, சுகாதாரத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தனக்கு அபராதம் விதிக்கும்படி கேட்டு கொண்டதாகவும் சொல்கிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த முகமது ஹசன், தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். பொது இடத்தில் சிகரெட் குடித்ததற்காக செராம்பன் மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து எனக்கு நோட்டீஸ் வந்துள்ளது. நான் அபராதத்தை செலுத்திவிடுகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மலேசியாவில் ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகளில் சிகரெட் குடிக்க தடை உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
13 ஆயிரம் ரயில் சேவை … பரபரக்கும் கும்பமேளா!
அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு… அமித்ஷாவுக்கு விஜய் கண்டனம்!