இலங்கை தமிழரான மலேசிய தொழிலதிபர் அனந்த கிருஷ்ணன் இன்று (நவம்பர் 28) காலமானார்.
“எங்கள் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன் மறைவை மிகுந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்” என்று அவரது நிறுவனமான உசாஹா தேகாஸ் கூறியுள்ளது.
சினிமா உலகில் ‘ஏ.கே’ வாக அறியப்படுபவர் நடிகர் அஜித். அதுவே டெலிகாம் உலகில் ‘ஏ.கே’ என்று தொழில் அதிபர்களால் அழைக்கப்படுபவர் அனந்த கிருஷ்ணன்.
இவர் மலேசியாவில் மேக்ஸில் என்ற தொலைத் தொடர்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். Astro Malaysia Holdings Bhd தனியார் ஊடகத்தையும் நடத்தி வந்தார். இலங்கையின் எஸ்.எல்.டி.மொபிடெல் நிறுவனத்திலும் இவரது நிறுவன பங்குகள் உள்ளன.
ஊடகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியல் எஸ்டேட் போன்ற நிறுவனங்களையும் நடத்தினார்.
அனந்த கிருஷ்ணன் மலேசியாவில் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ஃபோர்ப்ஸ் மதிப்பீட்டின்படி இவரின் சொத்து மதிப்பு, இந்திய மதிப்பில் ரூ.40,000 கோடி ஆகும்.
இந்தியாவில் டெலிகாம் உலகில் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த நெட்வொர்க் ஏர்செல். அனந்த கிருஷ்ணன் 2005 இல் ஏர்செல்லின் பெரும்பகுதி பங்குகளை சுமார் 1 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 800 கோடி) வாங்கினார்.
ஒரு காலத்தில் ஏர்செல் என்று சொன்னாலே பலருக்கு நினைவுக்கு வருவது சிஎஸ்கே அணிதான். எம்.எஸ்.தோனி தலைமையிலான சிஎஸ்கே போட்டிக்கு ஆனந்த கிருஷ்ணனின் ஏர்செல் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது. இந்த நிலையில் ஏர்செல் முறைகேடு வழக்கில் சிக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் மீது போடப்பட்டுள்ள ஏர்செல்-மேக்சில் முறைகேடு வழக்கில் அனந்த கிருஷ்ணன் பெயரையும் அடிக்கடி கேட்டிருப்போம். ஏர்செல் மேக்ஸில் முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆஜராகி வந்தார்.
தற்போது ஏர்செல் மேக்ஸில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், கடன் சுமை காரணமாக ஏர்செல் நிறுவனம் திவாலானது.
இந்தியாவில் இப்படியிருக்க, மலேசியால் தொட்டு தொடங்கிய அனைத்திலும் கோலோச்சியவர் அனந்த கிருஷ்ணன்.
1981 முதல் 2003 வரை மற்றும் 2018 முதல் 2020 வரை மலேசியாவின் பிரதமராக இருந்த மகாதீர் முகமதுவின் நண்பராகவும் அனந்த கிருஷ்ணன் இருந்தார். அந்தவகையில் தொலைத்தொடர்பு, செயற்கைக்கோள் மற்றும் ஒளிபரப்பு துறையில் ஏராளமான உரிமங்களையும் பெற்றார். இவரது பெயரில் 3 செயற்கைகோள்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
மலேசியா என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது, உலகின் இரண்டாவது மிக உயரமாக கட்டிடமாக அறியப்படும் இரட்டை கோபுரங்கள் தான். இது 88 மாடிகளைக்கொண்டது. மலேசியா செல்பவர்கள் இந்த கட்டிடத்துக்கு விசிட் அடிக்காமல் வரமாட்டார்கள். இந்தக் கோபுரத்தைக் கட்டுவதற்கு மூல விதைகளாக இருந்தவர்களில் அனந்த கிருஷ்ணனும் ஒருவர். அதாவது இந்த கோபுரங்களை கட்டுவதற்கு ஆரம்ப புள்ளியாக அரசுக்கு ஐடியா கொடுத்தவர் இவர்தான்.
ஆரம்ப வாழ்க்கை…
இவரது பெற்றோர் இலங்கையின் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் மலேசியாவில் குடியேறிய நிலையில், லிட்டில் இந்தியா என அழைக்கப்படும் கோலாலம்பூர் புறநகரான பிரிக்பீல்ட் பகுதியில் 1938ம் ஆண்டு பிறந்தவர் அனந்தகிருஷ்ணன். மலேசியாவில் உள்ள விவேகானந்தா தமிழ்ப் பள்ளியில் தொடக்கக் கல்வியைத் தொடங்கியவர். பின்னர் கோலாலம்பூர் விக்டோரியா கல்வி நிலையத்தில் படித்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றார்.
அனந்த கிருஷ்ணனின் மனைவி மோம்வஜரோங்சே சுப்ரிந்தா சக்ரபன் தாய்லாந்து அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களின் மகனான வென் அஜான் சிரிபான்யோ தனது தாயாரின் குடும்பத்தை பார்க்க தனது 18 வயதில் தாய்லாந்து சென்றார்.
அப்போது புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு தனது தந்தையின் இத்தனை பெரிய தொழில் சாம்ராஜ்யத்தை துறந்து துறவியானார்.
அனந்த கிருஷ்ணன் கல்வி முதல் பலவிதமான சேவைகளுக்கு வாரி வழங்குவதில் வள்ளல் என்று கூறப்படுகிறார். அவருக்கு அடுத்து அவரது மகன் இந்த சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புத்த மதத்தின் துறவியாக மாறியது உலகம் முழுவதும் பேசுபொருளானது. சுமார் 20 ஆண்டுகளாக வென் அஜான் துறவியாகவே வாழ்ந்து வருகிறார்.
தாய்லாந்து-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள தாவோ டம் மடாலயத்தில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஃபெங்கல் புயலுக்கு என்னாச்சு? : வானிலை மைய இயக்குநர் பேட்டி!
‘பச்சன்’ குடும்ப பெயரை துறந்தாரா ஐஸ்வர்யா? : துபாயில் நடந்த அந்த சம்பவம்!