நாடாளுமன்றத்திற்கே வருகை தராத பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தொடர் மவுனம் சாதித்த நிலையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று (ஆகஸ்ட் 10) மக்களவையில் பேசினார்.
சுமார் 2 மணி நேரமாக பேசிய மோடி சுமார் ஒன்றரை மணி நேரமாக மணிப்பூர் குறித்து ஒருவார்த்தை கூட பேசவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். அதனைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்ததாக மக்களவையில் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.யும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர், “தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக மணிப்பூர் வன்முறை விவகாரத்தில் மவுனம் காத்து வந்த பிரதமர் மோடி பேச வேண்டும் என்பதற்காக தான் எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.
ஆனால் எதற்காக கொண்டு வந்தோமோ, அதை பற்றி பேசாமல் சுமார் 2 மணி நேரமாக அவர் இஷ்டத்துக்கு பேசிக்கொண்டே சென்றார். மணிப்பூர் குறித்து பேசுமாறு எதிர்க்கட்சியினர் பலர் குரல் எழுப்பியும் அதை அவர் கண்டு கொள்ளவேயில்லை.
இதன்மூலம் மணிப்பூர் மற்றும் ஹரியானாவில் நடந்துள்ள கலவரம், ஏற்பட்டுள்ள உயிரிழப்பு குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை, தான் செய்ததில் எந்த தவறும் இல்லை என்ற அகம்பாவ மனநிலையில் தான் மோடி உள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கும்.
நேற்று முன் தினம் கூட மணிப்பூரில் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவர் கண்டிப்பாக பேச வேண்டும் என்பதற்காக தான், மக்களவையில் தோற்றுவிடும் என்று தெரிந்தும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தோம்.
பொதுவாக பிரதமர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச எழும்போது அமர்வார்கள். ஆனால் இன்று மோடி அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கும் பிரதமர் பதில் தரவில்லை. இது தான் மோடியின் சர்வாதிகார ஆட்டிடியூட்.
அவரை பேச வைக்க வேறு வழியில்லாத நிலையில் தான் எதிர்க்கட்சியினராக நாங்கள் வெளிநடப்பு செய்தோம். எனினும் நாடாளுமன்றத்திற்கே வருகை தராத பிரதமரை, வரவழைத்து வேறு வழியின்றி பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான்” என்றார்.
தொடர்ந்து கச்சத்தீவு மற்றும் மதுரை எய்ம்ஸ் தொடர்பாக பேசிய அவர், ”கச்சத்தீவு குறித்து விவாதிக்க இந்த கூட்டத்தொடரில் இரண்டு முறை நோட்டீஸ் கொடுத்தேன். ஆனால் அதை சபாநாயகர் எடுத்துக்கொள்ளவே இல்லை. மேலும் ஒரு நாட்டின் நிலப்பகுதியை கொடுப்பதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஏற்று சட்டம் இயற்றியிருக்க வேண்டும். ஆனால் கச்சத்தீவு விவகாரத்தில் இது இரண்டுமே நடக்கவில்லை. அதனால் கச்சித்தீவு இப்போது வரை அது இந்தியாவுக்கு தான் சொந்தம்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்ட எப்போதோ தமிழ்நாடு அரசு நிலம் கொடுத்துவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தரவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறுவது முற்றிலும் தவறானது. அங்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ஒற்றை செங்கலை தவிர வேறு எதுவும் இல்லை.
வகுப்பை 180 கி.மீ தூரத்தில் உள்ள ராமநாதபுரத்தில் ஆரம்பித்துள்ளார்கள். தலைமையிடம் பாண்டிச்சேரியில் உள்ளது. ரூ.2000 கோடி திட்டத்தில் 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் தற்போது வெறும் 50 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.
மதுரை எய்ம்ஸ்க்கு ஜப்பானில் கடன் வாங்குவது என்பது காதில் பூ சுற்றுகிற கதை. இதற்கு தமிழர்கள் அடுத்தாண்டு நடைபெற உள்ள நடாளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என்று டி.ஆர் பாலு தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல்காந்தியை நேரிடையாக தாக்கிய மோடி
தோல்வியில் முடிந்த நம்பிக்கை இல்லா தீர்மானம்!
இதை சொல்ல வெட்கப்படவில்லையா?!