இலங்கையில் 2019ம் ஆண்டு நடந்தேறிய தற்கொலைப்படை தாக்குதல் வழக்கில், அந்நாட்டு முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா ’சந்தேக நபர்’ என்று கொழும்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இலங்கையில் 2019 ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று அடுத்தடுத்து நடைபெற்ற தொடர் தற்கொலைப்படை தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த 44 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இறந்து போனவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் ஆவர்.
இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த தேசிய ஜவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு என்று குற்றம்சாட்டப்பட்டது.
இதன் தலைவர் முகமது ஜஹ்ரான் ஷாங்கிரிலா ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பின்போது இறந்துவிட்டதாக அப்போதைய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அறிவித்தார்.

சிறிசேனா சந்தேக நபர்!
எனினும், இந்த தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் தேசிய கத்தோலிக்க கமிட்டி சார்பில் கொழும்பு துறைமுக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக விசாரணையில் இருந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், இலங்கையில் இது போன்ற தாக்குதல் நடைபெறவுள்ளதாக தாக்குதலுக்கு முன்னதாகவே அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கை அறிக்கைகளை மைத்ரிபால சிறிசேனா புறக்கணித்ததாக கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டு நீதிபதி திலின கமகே குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து அவரை சந்தேக நபராக அறிவித்த நீதிமன்றம், அக்டோபர் 14ஆம் தேதி மைத்ரிபால சிறிசேனா கோர்ட்டில் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக இந்த தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில், முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா குண்டுவெடிப்பு தொடர்பான உளவு தகவல்களை சிறிசேனா புறந்தள்ளினார் என்று கூறப்பட்டது. இதற்கு சிறிசேனா மறுப்புத் தெரிவித்தார். தற்போது அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி புத்தக வெளியீடு: இளையராஜா ஆப்சென்ட் ஏன்?