தொலைபேசியில் வரும் அழைப்பை ஏற்று பேசும்போது ஹலோ என்று சொல்வதற்கு பதில் வந்தேமாதரம் என்று சொல்ல வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணிக் கட்சி ஆட்சியில் உள்ளது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு பாஜகவின் ஆதரவோடு ஆட்சியைப் பிடித்துள்ளார் ஏக் நாத் ஷிண்டே.
தொலைபேசியில் அழைப்பு வந்தால் நம்மில் பலரும் ஹலோ என்று சொல்லியே உரையாடல்களைத் தொடங்குகிறோம். மிகச் சிலர் வணக்கம் என்றும் சொல்கிறோம்.
ஆனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொலைபேசியில் அழைப்பு வரும்போது ஹலோ என்று சொல்வதற்குப் பதிலாக வந்தேமாதரம் என்று சொல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை மாநில நிர்வாகத் துறை நேற்று (அக்டோபர் 1) வெளியிட்டிருந்தது. அதன்படி இந்த உத்தரவு இன்று (அக்டோபர் 2) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஹலோவிற்கு பதில் வந்தேமாதரம் என்று சொல்ல வேண்டும் என்பதை, கடந்த ஆகஸ்ட் மாதம் மகாராஷ்டிரா அமைச்சரவையில் அம்மாநில கலாச்சார துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் வாய்மொழியாக கூறியிருந்தார்.
”ஹலோ என்பது மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வெளிப்பாடு. அது வெறும் வார்த்தை மட்டும் தான். அது இருவருக்கும் இடையில் பாசத்தை வெளிப்படுத்துவதில்லை.
வந்தேமாதரம் என்பது வெறும் வார்த்தையல்ல. இது ஒவ்வொரு இந்தியனும் அனுபவிக்கும் உணர்வு.
ஹலோவிற்கு பதில் வந்தேமாதரம் என்று சொல்வதால் நாட்டின் மீது உள்ள பற்று அதிகரிக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.
மேலும், இதற்கான உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
மோனிஷா
ஆம்னிக்கு பதில் அரசு விமான சர்வீஸ்: அப்டேட் குமாரு
டி20 உலகக் கோப்பை: அசத்தப்போகும் 5 வீரர்கள் யார்?