வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள விவசாயிகள், தங்களது கோரிக்கையை பிரதமருக்குத் தெரிவிக்கும் விதமாக வெங்காயத்தை தபாலில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்தியாவில், 50 சதவிகிதம் வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பு சீசனில் அதிகப்படியான விளைச்சல் காரணமாக வெங்காயத்தின் விலை வெகுவாக சரிந்துள்ளது.
இதனால் நாசிக், புனே, சோலாப்பூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால் மிகவும் குறைந்த விலையே கிடைப்பதால் சாலையோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சில விவசாயிகள் வெங்காயத்தை மார்க்கெட்டுக்கு விற்பனை செய்ய எடுத்துச் சென்றுவிட்டு வெறும் ஒரு சில ரூபாயை மட்டும் வாங்கி வரும் அவலமும் இருந்து வருகிறது.
சமீபத்தில் மத்திய விவசாயத் துறை அமைச்சகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவரான சஞ்சய் சாத்தே, தன் நிலத்தில் விளைந்த 750 கிலோ வெங்காயத்தையும் மொத்த விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு, வெங்காயம் கிலோ ஒரு ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, தன் வெங்காயத்தை கிலோ 1.40 ரூபாய் என நிர்ணயம் செய்து, மொத்தமாக 1,064 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
சுமார் நான்கு மாதமாகக் கஷ்டப்பட்டு உழைத்து, இறுதியில் வெறும் 1,064 ரூபாய்க்கு மொத்த வெங்காயமும் விலை போனதால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்த சஞ்சய் சாத்தே, அதை மத்திய அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் உணர்த்தும் வகையில், தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை அப்படியே பிரதமருக்கு மணி ஆர்டர் செய்தார்.
இந்த நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் தங்களது கோரிக்கையை பிரதமருக்கு தெரிவிக்கும் விதமாக அகமத்நகர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் வெங்காயத்தை தபாலில் பிரதமர் மோடிக்கு அனுப்பி இருக்கின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள விவசாயி ஒருவர், “வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டு இருக்கும் தடையை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியும்.
கடந்த ஆண்டு விளைவித்து விற்பனை செய்த வெங்காயத்துக்கு குவிண்டால் ஒன்றுக்கு 1,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
வெங்காயத்தை விளைவிக்க ஆகும் செலவு அதிகரித்துவிட்டது. பூச்சிக்கொல்லி மருந்து, உரத்துக்கு சர்வதேச மார்க்கெட் நிலவரத்திற்கு தக்கபடி விலை கொடுக்கிறோம். ஆனால் விளைவித்த பொருட்களுக்கு இந்திய மார்க்கெட்டுக்கு தக்கபடி விற்பனை செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.
வெங்காயத்திற்கு மிகவும் சொற்ப விலை கிடைப்பதால் அதனை அறுவடை செய்யாமல் அப்படியே தீவைத்து எரிக்கும் சம்பவங்களும் நடக்கின்றன.
கடந்த டிசம்பர் மாதம் ஒரு கிலோ வெங்காயம் 18 ரூபாய் வரை விற்பனையானது.
ஆனால், இப்போது விளைவிக்க பயன்படுத்திய செலவைக்கூட எடுக்க முடியவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சில விவசாயிகள் தங்கள் நிலத்தை அரசு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராஜ்