பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளா நிகழ்வில் மிக முக்கியமானது மௌனி (தை )அம்மாவாசை தினத்தில் கங்கை, யமுனை , சரஸ்வதி இணையும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் நீராடுவதாகும். மௌனி அமாவாசை நாள் என்பது ஜனவரி 28 ஆம் தேதி மாலை 7:32 மணிக்குத் தொடங்கி ஜனவரி 29 ஆம் தேதி மாலை 6:05 மணிக்கு முடிவடைகிறது. இந்த தருணத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் அதாவது அதிகாலைக்கு முந்தைய நேரத்தில் நீராட பக்தர்கள் கோடிக்கணக்கில் திரிவேணி சங்கமத்தில் கூடுவார்கள்.
அதாவது, இந்த இடத்தில்தான் யமுனை நதியின் லைட் ப்ளு வண்ணத்திலான தண்ணீர் லைட்டாக மண் வண்ணத்திலான கங்கை நதி நீருடன் இணையும். அப்போது, இரண்டும் சேர்ந்து புது வண்ணத்திலான நீராக மாறி ஓடும். இதுதான், பூமிக்கு அடியில் ஓடுவதாக நம்பப்படும் சரஸ்வதி நதியின் தண்ணீர் என்பது நம்பிக்கை. இதனால், sangam nose என்று அழைக்கப்படும் இந்த பகுதியில் நீராடவே அனைத்து பக்தர்களும் விரும்புவார்கள்.
இந்த சமயத்தில் இங்கு நீராடினால் பாவங்கள் நீங்கி மோட்சம் அல்லது முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், இந்த சமயத்தில் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. நாகசாதுக்கள் நீராடும் இடத்தில் மட்டுமல்லாமல் பக்தர்கள் தாங்கள் வசதிக்கேற்ப எங்காவது ஒரு இடத்தில் நீரில் மூழ்கி எழுந்தாலே முழுமையான ஆன்மீக பலன்களை பெறமுடியும் .
வசதிக்கேற்ப எங்காவது ஒரு இடத்தில் மூழ்கி எழலாம். அல்லது கங்கை நீரை எடுத்து வந்து சாதாரண தண்ணீரில் கலந்து குளித்தாலும் உரிய பலன் கிடைக்கும் . சங்கம் நோஸ் பகுதியில் வந்து குவிய வேண்டாம் என்றும் ஜோதிட வல்லுநர்கள் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.
ஆனாலும், எல்லா எச்சரிக்கையையும் அனைத்து ஏற்பாடுகளையும் மீறி கூட்ட நெரிசல் ஏற்பட்டு விட்டது.எதிர்பார்த்தபடியே நேற்று இரவில் இருந்து திரிவேணி சங்கமத்தை நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதியது. அங்கு , கூட்ட நெரிசலை தடுக்க வைக்கப்பட்ட பேரிகார்டுகளை தாண்டி மக்கள் சென்ற போது, கூட்ட நெரிசல் ஏற்பட தொடங்கியது. இதனால், நதியோரத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் பலியாகியுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பக்தர்களின் உடமைகள் காலணிகள் அங்கு சிதறி கிடந்தன. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கூட்ட நெரிசல் ஏற்பட்டு 15 பேர் இறந்ததால் மௌனி அம்மாவாசை நிகழ்சிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் சுய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தியுள்ளார்.