உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று (ஜனவரி 29) ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 10 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி 13-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கடந்த 16 நாட்களில் 15 கோடி பேர் புனித நீராடியுள்ளனர்.
இந்தநிலையில், மகா கும்பமேளாவில் மெளனி அமாவாசையான இன்று திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடுவது சிறப்புக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இன்று ஒரே நாளில் 10 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து துணை ராணுவப்படையினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில், இன்று காலை திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராட குவிந்தபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் முதல் 40 பேர் வரை காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கும்பமேளாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10 பேர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தெரிகிறது.
கும்பமேளாவில் கூட்டநெரிசல் ஏற்பட்டதையடுத்து பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்புகொண்டு முதல்வர் ஸ்டாலின் நிலவரத்தை கேட்டறிந்தார்.