2022 ஆண்டில் இதுவரை இறந்த புலிகளின் எண்ணிக்கை 74 என்றும் மத்தியப்பிரதேசத்தில் மட்டும் 27 புலிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய அளவிலான புலிகள் கணக்கெடுப்பின்படி, நாட்டிலேயே அதிகபட்சமாக 526 புலிகள் வாழும் மாநிலமாக மத்தியப்பிரதேசம் விளங்கியது. அதனால் நாட்டின் ‘புலி மாநிலம்’ என்ற பெருமையையும் பெற்றது.
ஆனால் இந்த (2022) ஆண்டு இதுவரை நாடு முழுவதும் 74 புலிகள் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றில் 27 புலிகள் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவை என்ற தகவல் வெளியாகி உள்ளது. தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் அதன் இணையதளத்தில் இந்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. மத்தியப்பிரதேசத்துக்கு அடுத்தபடியாக மராட்டியத்தில் 15 புலிகளும், கர்நாடகத்தில் 11 புலிகளும் இந்தக் காலகட்டத்தில் இறந்துள்ளன.
அதற்கு அடுத்தபடியாக அசாமில் 5, கேரளா, ராஜஸ்தானில் தலா 4, உத்தரப்பிரதேசத்தில் 3, ஆந்திராவில் 2, பீகார், ஒடிசா, சத்தீஷ்கார் மாநிலங்களில் தலா ஒரு புலி இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புலிகள் இறந்ததற்கு காரணம், புலிகளுக்கு இடையிலான எல்லை மோதல், வயதானது, உடல்நல பாதிப்பு, வேட்டை மற்றும் மின்வேலியில் சிக்குவது போன்றவை என்று அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் ஆகிய ஐந்து புலிகள் காப்பகங்கள் உள்ளன. இவற்றில் இந்த ஆண்டு இதுவரை இறந்த புலிகள் குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
– ராஜ்