சன்பீஸ்ட் மாம்ஸ்’ஸ் மேஜிக் பிஸ்கெட்டுகளுக்கு… சென்னை உயர்நீதிமன்றம் தடை!

Published On:

| By Manjula

சன்பீஸ்ட்டின் மாம்ஸ்’ஸ் மேஜிக் பிஸ்கெட்டுகளை பிரிட்டானியாவின் குட் டே பிஸ்கட்டுகள் போன்று நீலநிற ரேப்பரில் விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஐடிசி லிமிடெட் நிறுவனம் சன்பீஸ்ட் மாம்ஸ்’ஸ் மேஜிக் என்ற பெயரில் பிஸ்கட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இதற்காக ஐடிசி பயன்படுத்தும் லோகோ மற்றும் ரேப்பர் இரண்டும் தங்களுடைய குட் டே நீலநிற பிஸ்கட்டுகள் போல இருப்பதாக பிரிட்டானியா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 8)  சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பிரிட்டானியா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பிரிட்டானியா நிறுவனம் 1997-ம் ஆண்டில் இருந்து நீலம் மற்றும் மஞ்சள் நிற ரேப்பரை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சன்பீஸ்ட் நிறுவனம் கடந்த 2023 ஜூன் மாதத்தில் இருந்து தான் தன்னுடைய பட்டர் பிஸ்கட்டுகளில் நீலம் மற்றும் மஞ்சள் கலந்த ரேப்பரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இது நேர்மையற்ற ஒன்றாகும் என வாதிட்டார்.

தொடர்ந்து பி.எஸ்.ராமன், 1892-ம் ஆண்டு பிரிட்டானியா நிறுவனம் சிறியளவில் தன்னுடைய பிஸ்கட் விற்பனையை கொல்கத்தாவில் தொடங்கியது. 1979-ம் ஆண்டு பிஸ்கட், பிரெட், ரஸ்க், கேக்குகளுடன் பால், யோகர்ட், வெண்ணெய், சீஸ் ஆகியவற்றையும் விற்பனை செய்ய ஆரம்பித்தது. 1986-ம் ஆண்டு குட் டே பிஸ்கெட்டுகள் விற்பனையை பிரிட்டானியா தொடங்கியது. எங்களின் மொத்த விற்பனையில் பட்டர் பிஸ்கெட்டுகள் மட்டுமே சுமார் 32.7% மார்க்கெட் ஷேரை கொண்டுள்ளது.

அதே நேரம் சன்பீஸ்ட் நிறுவனம் 2015-ம் ஆண்டில் தான் பட்டர் பிஸ்கெட்டுகள் விற்பனையை தொடங்கியது. தொடக்கத்தில் அவர்கள் சிவப்பு நிற ரேப்பரில் தான் தங்களுடைய பட்டர் பிஸ்கெட்டுகள் விற்பனையை தொடங்கினர். திடீரென இந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் நீலம், மஞ்சள் நிற ரேப்பரில் பட்டர் பிஸ்கட்டுகளை விற்பனை செய்ய ஆரம்பித்தனர் என்று புள்ளிவிவரங்களுடன் வாதிட்டார்.

அவரின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, பழைய வர்த்தக மற்றும் வணிக சின்னங்கள் சட்டம் 1958-ம் ஆண்டை போல அல்லாமல் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் வண்ணத்தையும் ஒரு அடையாளமாக பதிவு செய்யலாம் என அங்கீகரித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் மார்க் (Mark) என்ற ஒற்றை சொல்லுக்குள் பெயர், சாதனம், பிராண்ட், டிக்கெட், கையொப்பம்,சொல், கடிதம், எண், பொருட்களின் வடிவம், பேக்கேஜிங் போன்றவை அடங்கும் என மேற்கோள் காட்டி சன்பீஸ்ட் மாம்ஸ்’ஸ் மேஜிக் பிஸ்கட்டுகள் விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

காரில் இருந்து அதிமுக கொடியை அகற்றிய ஓபிஎஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel