மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி தனக்கு வழங்கப்பட இருப்பதாக வரும் தகவலுக்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, காங்கிரஸில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறி 22 எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இதனால் மத்தியப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு பிறகு 2018ல் பதவிக்கு வந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து, முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.
வரும் நவம்பர் 17ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 230 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை 18 ஆண்டுகளாக பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் தான் முதலமைச்சராக இருக்கிறார். இந்த முறையும் எப்படியாவது ஆட்சியை பிடித்து முதலமைச்சராக வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பாஜகவை வீழ்த்தி அரியணை ஏற காங்கிரஸும் முயற்சித்து வருகிறது.
இந்தநிலையில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவி சிவராஜ் சிங் சவுகானுக்கு வழங்கப்படாது என்றும், வேறு ஒருவரை பாஜக மேலிடம் தேர்வு செய்யும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தியாளர்கள் சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கேட்ட போது, அவர் நேரடியாக பதில் சொல்லவில்லை. “மீடியாக்கள் ஏன் கட்சி வேலையை செய்கிறீர்கள். எங்கள் கட்சி அதன் வேலையை செய்யும்” என கூறினார்.
பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் , “கட்சியின் பாராளுமன்ற வாரியக் குழு அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்யும்” என்று கூறினார்.
அதேசமயம் கடந்த சில தினங்களாக பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என மத்தியப் பிரதேச அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இதுதொடர்பான கேள்விக்கு தி இந்து ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “முதல்வர் பதவிக்கான போட்டியில் எங்கள் குடும்பம் இல்லை. என் தாத்தா, என் அப்பா என யாரும் முதல்வர் பதவிக்கான பந்தயத்தில் இருந்ததில்லை. ஒரு வளர்ச்சியை கொண்டு வருவதற்கான போட்டியில் மட்டுமே இருக்கிறோம். 2018ஆம் ஆண்டிலும் இந்த பந்தயத்தில் நான் இல்லை. இப்போதும் இல்லை” என்று கூறியுள்ளார்.
அதுபோன்று “மத்திய பிரதேசத்தில் 18 ஆண்டுகளாக சிவ்ராஜ் சிங் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த காலத்தில் நோய்வாய்பட்ட மாநிலம் என்ற பெயரில் இருந்து வெளியே வந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பணிகள் மட்டுமே முக்கியம்” என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கே.எஸ்.அழகிரி