65ஆவது காமன்வெல்த் மாநாட்டில் இந்திய சபாநாயகர்கள் ஏந்தி வந்த தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்று டேக் இருந்ததால் சர்ச்சை வெடித்துள்ளது.
தஞ்சாவூர் பொம்மை முதல் இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் மேட் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்ய வேண்டும்.
அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இந்தியாவின் புகழை பரப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கூறி வரும் நிலையில், தேசிய கொடியே சீனாவில் இருந்து வாங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65 ஆவது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு ஆகஸ்ட் 22 அன்று தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சபாநாயகர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பாக சபாநாயகர் அப்பாவு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் பங்கேற்றனர்.
மேலும் இந்தியாவின் அனைத்து மாநில சபாநாயகர்களும், சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இடம்பெற்ற பேரணியில் இந்தியக் குழுவினர் கையில் ஏந்திச் சென்ற தேசியக் கொடிகள் அனைத்திலும் மேட் இன் சைனா என்ற வாசகம் குறிக்கப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சபாநாயகர்கள் ஓம்பிர்லாவிடம் முறையிட்டனர்.
இதனை ஓம் பிர்லா சிரித்து மழுப்பியுள்ளார். ’மேக் இன் இந்தியா’ என்று முழங்கி வரும் நேரத்தில் தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்று குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசியக் கொடி 100 சதவீதம் பாலிஸ்டரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொடியை தயாரிக்காமல் சீனா தயாரித்த கொடியை வாங்கி பயன்படுத்துவதா என்று சர்ச்சை எழுந்துள்ளது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக சட்டபேரவை சபாநாயகர் அப்பாவு கனடாவில் இருந்தபடியே புதியதலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”இந்திய தேசிய கொடிகள் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருப்பது உண்மைதான்.
இந்த நிகழ்வு வருத்தம் அளிக்கிறது. தேடிய கொடிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய அவசியமில்லை, தமிழகத்திலேயே, ஈரோடு, கரூர், நாமக்கல், சிவகாசி ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் 100 கோடி தேசிய கொடிகளை தயாரிக்க முடியும்.
ஆனால் வெளிநாட்டிலிருந்து ஏன் இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று தெரியவில்லை” என்று கூறினார்.
செல்போன், லேப்டாப் போன்ற பொருட்கள் தான் இதுவரை மேட் இன் சைனாவாக இருந்தது.
தற்போது, தேசியக் கொடியைச் சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதா? ’மேட் இன் இந்தியா’ என்ன ஆனது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மோனிஷா
தேசியக் கொடி : செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்!