இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28 ஆம் தேதி நள்ளிரவு தொடங்க உள்ளது.
சூரிய கிரகணத்திற்குப் பிறகு சந்திர கிரகணம் வருவது வழக்கமான ஒன்று. கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்பட்டதை தொடர்ந்து வரும் 28 ஆம் தேதி (நாளை) நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது.
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வருவதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழும். இதனால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
பூமியின் நிழல் முழுமையாக சந்திரனை மறைத்துக் கொள்ளும் போது முழு சந்திர கிரகணம் ஏற்படும்.
சந்திரனின் ஒரு பகுதி மட்டும் பூமியின் நிழலால் மறைக்கப்படும் போது பகுதி சந்திர கிரகணம் ஏற்படும்.
நாளை நிகழும் சந்திர கிரகணமானது பகுதி சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. இதனால் பூமியின் ஒரு பகுதி நிழல் மட்டுமே சந்திரன் மீது விழும்.
சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படுமா?
இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 11.31 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்க உள்ளது. தொடர்ந்து அக்டோபர் 29 ஆம் தேதி அதிகாலை 1.05 மணிக்கு முழுமையான பகுதி சந்திர கிரகணம் நிகழ்வு ஏற்படும். அதிகாலை 2.24 மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைய உள்ளது.
கிட்டத்தட்ட 1 மணி நேரம் 19 நிமிடங்கள் நீடிக்கும் இந்த வானியல் நிகழ்வை மக்கள் நீண்ட நேரம் வெறும் கண்களால் காண முடியும். இந்த பகுதி சந்திர கிரகணத்தை நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து பார்க்க முடியும்.
இந்தியாவில் மட்டுமின்றி, மேற்கு பசிபிக் பெருங்கடல், ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு தென் அமெரிக்கா, வடகிழக்கு வட அமெரிக்கா,
அட்லாண்டிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணமானது தென்படும்.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட முழு சந்திர கிரகணம் இந்தியாவில் தென்பட்டது. தொடர்ந்து நாளை நிகழவுள்ள சந்திர கிரகணத்திற்குப் பிறகு 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழும் சந்திர கிரகணம் தான் இந்தியாவில் தெரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
குளவி கொட்டி மூன்றாம் வகுப்பு மாணவன் மரணம்!
வேலைவாய்ப்பு: மீன்வள பல்கலைக்கழகத்தில் பணி!