ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் இன்று (ஆகஸ்ட் 20) மோதி நொறுங்கியது.
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
கடந்த 1976-ஆம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா லூனா 24 விண்கலத்தை அனுப்பியது. 47 ஆண்டுகளுக்கு பிறகு லூனா 25 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த லூனா 25 விண்கலத்தின் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் ஒரு வருடம் ஆய்வு செய்வதை ரஷ்யா நோக்கமாக கொண்டிருந்தது.
லூனா விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததும் அதன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில் லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“லுனா விண்கலம் இன்று நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதைக்கு தயாராகும் போது ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் விண்கலத்தை கட்டுப்படுத்த முடியாததால் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது. திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ள நிலையில், ரஷ்யாவின் லூனா விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவில் மோதி நொறுங்கியுள்ளது இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சந்திராயன் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரமானது ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை மாலை 5.45 மணியிலிருந்து 06.04 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
அனிதாவின் குரல்… கண்கலங்கிய உதயநிதி
“திமுகவை ஆட்சியிலிருந்து வெளியேற்றுவது தான் மாநாட்டின் நோக்கம்” – பா.வளர்மதி