கன்னியாகுமரியில் வசித்த கேரள பெண் கரீஷ்மா. இவர் கல்லூரியில் படிக்கும்போது திருவனந்த புரத்தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற வாலிபரை காதலித்தார். இந்நிலையில் கரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. எனவே, ராணுவ அதிகாரியை மணக்க கரீஷ்மா முடிவு செய்தார்.
தொடர்ந்து, காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்டிக்க விரும்பிய கரீஷ்மா, அவரை கொலை செய்வதுதான் ஒரே தீர்வு என முடிவு செய்தார். அவருக்கு குளிர்பானத்தில் வலி நிவாரண மாத்திரை, தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தும் பலன் அளிக்கவில்லை.
இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரோன் ராஜை வீட்டுக்கு அழைத்த கரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் என்று கூறி குடிக்க கொடுத்தார். அதை குடித்த ஷரோன் ராஜின் உடல் உறுப்புகள் செயல் இழந்து இறந்து போனார்.
போலீஸ் விசாரணையில் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்ட கரீஷ்மா ஓராண்டு நீதிமன்ற காவலில் இருந்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
கேரளாவின் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த வெள்ளிக்கிழமை கரீஷ்மாவை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். இந்த நிலையில், கரீஷ்மாவுக்கு இன்று மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, தான் வீட்டுக்கு ஒரே மகள் என்பதால் தண்டனையை குறைத்து வழங்கும்படி நீதிபதியிடம் மன்றாடினார்.
ஆனாலும், தண்டனையை குறைக்க நீதிபதி மனம் இரங்கவில்லை. குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய் மாமா நிர்மலாகுமரன் நாயருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரீஷ்மாவின் தாயார் சிந்து இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளி. இவர் மீதான குற்றத்துக்கு போதிய சாட்சி இல்லாததால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
“இறக்கும் தருவாயில் கூட கரீஷ்மாவுக்கு தண்டனை வழங்க கூடாது என்று ஷாரோன் கூறியிருக்கிறார். இது ஷாரோனின் காதலை காட்டுகிறது. காதலின் நம்பிக்கையை கரீஷ்மா உடைத்துள்ளார். ஷாரோன் வைத்திருந்த நம்பிக்கையையும் கரீஷ்மா தகர்த்துள்ளார்.
கரீஷ்மா கொடுத்ததை ஷாரோனால் குடிக்க முடியவில்லை. இருந்தும் குடித்துள்ளார். 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். அப்போதும், கரீஷ்மாவை ஷாரோன் நேசித்துள்ளார்.
கரீஷ்மாவின் காதலுக்கு அவர் அடிமையாக இருந்துள்ளார். இத்தகைய காதலுக்கு துரோகம் செய்வது கொடூரமான மனநிலை. அவர் செய்த குற்றத்தின் அடிப்படையில் இளவயது பெண் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இதுதான் உண்மையான ஆசிர்வாதம்’- சீக்ரெட் சொல்லும் சாய்பல்லவி
புகார் கொடுத்த ஏழாவது நாளில் சமூக ஆர்வலர் விபத்தில் பலி… சந்தேகம் எழுப்பும் எடப்பாடி, அண்ணாமலை