ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி நேற்று (ஜூன் 2) இரவு நிகழ்ந்துள்ள கோர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் ரயில் சேவை வழங்கப்பட்டு வரும் நிலையில் மூன்று ரயில்கள் அடுத்தடுத்து ஒன்றோடொன்று மோதிக் கொண்ட மிக மோசமான விபத்து நடந்தது எப்படி என்ற கேள்வி எழுந்து வருகிறது.
என்னதான் நடந்தது?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சர் விஸ்வேஸ்வரயா டெர்மினலில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ஹவுராவை நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பால்சோர் பகுதி பஹனகா பஜார் ரயில் நிலையம் அருகே முதலில் தடம்புரண்டது. இதில் 2 பெட்டிகள் அருகிலுள்ள தண்டவாளத்தில் விழுந்தன.
அதே நேரத்தில் அந்த தண்டவாளத்தில் எதிர்புறத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது.
இதனால் அந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் நிலைகுலைந்தது. உடைந்த கதவுகள், ஜன்னல்கள் வழியாக பயணிகள் தூக்கி வீசப்பட்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்னர். மேலும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகளும் தடம் புரண்டன. மூன்றாவது தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது விபத்தின் பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிகாரிகள் மற்றும் சாட்சிகளின் கூற்றுப்படி, நேற்று மாலை 6.50 முதல் 7.10 மணி வரையிலான சில நிமிடங்களில் இந்த மிகப்பெரிய ரயில் விபத்து நடந்துள்ளது.
“முதலில் சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு லூப் தடத்தில் வந்த சரக்கு ரயிலுடன் மோதியது. இதனால் அதன் பல பெட்டிகள் கவிழ்ந்தன.
அப்போது எதிர்திசையில் அதிவேகத்தில் வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியதில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது” என்று என்டிடிவி குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மாறாக ”இரண்டு பயணிகள் ரயில்கள் முதலில் விபத்தில் சிக்கின. பின்னர் மூன்றாவதாக ஒரு சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று இந்திய ரயில்வேயின் நிர்வாக இயக்குனர் அமிதாப் சர்மா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த ரயில் விபத்து எப்படி நடந்தேறியது என்பதில் இன்னும் தெளிவான விவரம் கிடைக்கபெறவில்லை.

இதற்கிடையே இன்று காலை ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் விபத்து நடந்த பகுதியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமையில் ரயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்போது விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாகி வரும் நிலையில், உரிய விசாரணைக்கு பிறகே விபத்தின் உண்மையான காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் தயார்: உதயநிதி