ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

அரசியல் இந்தியா

ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நேற்று (மார்ச் 13) தொடங்கியது. நாடாளுமன்ற அவை தொடங்கியதும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “லண்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் 2 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் தொடங்கிய நாடாளுமன்ற அவையில் தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.

ஆனால் பாஜக எம்பிக்கள் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து இன்று (மார்ச் 14) 2வது நாளாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது அவை நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சிகளை குறிவைத்து மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க் கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி, பிஎஸ்ஆர் கட்சியை சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு போராட்டம் நடத்தினர்.

அதேபோன்று காங்கிரஸ் எம்பிகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வாசலில் “மோடி அதானி பாய் பாய்” என்ற கோஷங்களையும் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 2 மணிக்கு அவை தொடங்கியது. அப்போது ஆளுங்கட்சி எம்பிக்கள், லண்டன் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆனால் காங்கிரஸ் எம்பிக்கள், ராகுல் காந்தி லண்டனில் பேசியதில் எந்த தவறும் இல்லாத நிலையில் ஆளுங்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லி கொண்டிருக்கிறது. மேலும் ஆளுங்கட்சி எம்பிக்களே அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடங்கச் செய்வது சரியல்ல என்று தெரிவித்தனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் 2வது நாளாக இன்றும் முழுமையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மோனிஷா

மனைவியும் குழந்தையும்: ஸ்ரீதர் வேம்பு தரும் விளக்கம்!

வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு: செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *