திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை கொலை செய்து பிரிட்ஜில் வைத்துவைட்டு, அன்றே வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள நசார்ப்கார்க்கைச் சேர்ந்தவர் 24 வயதான சாஹில் கெலாட். இவர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரும் டெல்லியில் தங்கி மருத்துவப் பயிற்சி படிப்பு படித்து வந்த ஹரியானாவைச் சேர்ந்த 23 வயதான நிக்கி யாதவும் கடந்த 2018ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர்.
அதன் பின்னர்,கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு நொய்டாவில் உள்ள கல்லூரியில் இருவரும் ஒரே படிப்பில் சேர்ந்த நிலையில் வாடகைக்கு வீடு எடுத்து லிவ் – இன் – ரிலேஷன்ஷிப் முறையில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் மணாலி, ரிஷிகேஷ், ஹரித்துவார் என பல்வேறு சுற்றுலாத்தலங்களுக்கு சென்று காதலை வளர்த்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த 9ம் தேதி அவரது சொந்த ஊரில் சாஹில் கெலாட்டுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனை சில நாட்கள் கழித்தே அறிந்த நிக்கி யாதவ், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு சாஹிலிடம் வற்புறுத்தி சண்டையிட்டுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட சாஹில், சம்பவத்தன்று காரில் இருந்து மொபைலுக்கு சார்ஜ் போடும் டேட்டா கேபிளை பயன்படுத்தி நிக்கி யாதவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது காரிலேயே நிக்கி யாதவின் உடலை முன் சீட்டில் அமர வைத்தபடி சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள உணவகத்திற்கு கொண்டு வந்தார். அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் நிக்கியின் உடலை வைத்துள்ளார்.
அதனையடுத்து எந்தவித சலனமும் இன்றி காதலியை கொலை செய்த அன்றே ஊருக்குச் சென்று வேறோரு பெண்ணை திருமணம் செய்துள்ளார் சாஹில்.
இந்நிலையில் நிக்கி யாதவ் காணவில்லை என்று அவரது பக்கத்து வீட்டுக்காரர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக சாஹிலை கண்காணித்த போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக சாஹில் பணிபுரிந்த உணவகத்திற்கு நேற்று வந்த காவல் துறையினர் குளிர்சாதன பெட்டியில் இருந்த நிக்கியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நிக்கி யாதவ் கொலை செய்யப்பட்டு 3 நாட்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் சாஹிலை அவரது சொந்த கிராமத்தில் வைத்து கைது செய்து 5 நாள் காவலில் எடுத்துள்ள போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

நிக்கி யாதவ் கொல்லப்பட்டதாக கூறப்படும் கார் மற்றும் உடலை அடைத்து வைத்திருந்த குளிர்சாதன பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தனது மகள் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது தந்தை சுனில் யாதவ் சாஹிலுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டெல்லியில் ஷ்ரத்தா வால்கர் என்பவரை அவரது லிவ் இன் பார்ட்னர் ஆப்தாப் பூனவல்லா கொலை செய்து, உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அதேபோன்றதோரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது டெல்லியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
கங்குலிக்கு கோலியை பிடிக்காது: சேத்தன் சர்மா பற்ற வைத்த நெருப்பு!
யார் தடுத்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: சி.பி.ராதாகிருஷ்ணன்