லிபியாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் 6 ஆயிரம் மக்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய தரைக்கடலின் ஒரு பகுதியான அயோனியன் கடல் பகுதியில் கடந்த வாரம் புயல் உருவானது. டேனியல் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் செப்டம்பர் 10-ஆம் தேதி லிபியாவின் பங்காசி பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 165 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் லிபியாவின் பல பகுதிகளிலும் கன மழை பெய்தது.
டெர்னா பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவால் அங்கிருந்த இரண்டு அணைகள் உடைந்தது.
இதனால் மக்களின் வீடுகள், அலுவலகங்களில் வெள்ளம் சூழ்ந்தது. டெர்னா பகுதியில் மட்டும் 5000 மக்கள் உயிரிழந்துள்ளனர். 20000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதியான பெங்காயிலும் அதிகளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கபட்ட பகுதிகளை மீட்கும் பணியில் பாதுகாப்பு படைவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 6000 மக்கள் உயிரிழந்திருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக நாடுகள் பலவும் லிபியாவுக்கு ஆதரவு கரம் நீட்டி வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு படை வீரர்கள், சூழலியல் ஆர்வலர்களை லிபியாவுக்கு அனுப்பி வருகின்றனர். ஐரோப்பிய யூனியன் 100 மில்லியன் டாலர் நிவாரணம் அறிவித்துள்ளது.
லிபியாவில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து உள்துறை அமைச்சக செய்திதொடர்பாளர் டெரக் அல் ஹராஸ் , “டெர்னா பகுதியில் மட்டும் 5200 மக்கள் இறந்துள்ளனர். 20000 மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை. வரும் நாட்களில் உயிர்ச்சேதம் அதிகரிக்கும் சூழல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
பிரபாஸின் ‘சலார்’ : ரிலீஸ் தேதி மாற்றம்!
“பாஜக அரசை ஒழிக்க கவனம் செலுத்துவோம்” – உதயநிதி