தேர்தல் பத்திர நிதி : புதிய தரவுகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

இந்தியா

இந்திய தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் பத்திர நிதி விவரங்களை இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுவரை எஸ்.பி.ஐ வங்கி விற்பனை செய்த அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டது.

இதையடுத்து எஸ்.பி.ஐ வழங்கிய தரவுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 6060 கோடி ரூபாய் பெற்று பாஜக அதிக தேர்தல் நிதி பெற்றிருந்தது தெரியவந்தது. கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் 1200 கோடிக்கும் அதிகமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து மார்ச் 15ஆம் தேதி இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பத்திர எண்களை எஸ்.பி.ஐ ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியது.  தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர எண்களை வழங்கவும் எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில் “சிட்டிசன்ஸ் ஃபார் ரைட்ஸ் டிரஸ்ட்” என்ற அமைப்பு, மார்ச் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை ரூ. 4002 கோடி மதிப்பிலான 9,159 பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளதாகவும், அதன் விவரங்களையும் வெளியிட உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

“பாரத ஸ்டேட் வங்கி மார்ச் 2018 முதல் ரூ.16,518 கோடி மதிப்பிலான 28,030 பத்திரங்களை விற்றுள்ளது. இந்த தகவல் ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும்,12,516 கோடி ரூபாய் மதிப்பிலான 18,871 பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் மட்டும்தான் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஏப்ரல் 2019 – பிப்ரவரி 2024க்கும் பெறப்பட்ட பத்திரங்களின் விவரமாகும்.

ரூ. 4,002 கோடி மதிப்பிலான 9,159 பத்திரங்களின் விவரங்களையும் வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் புதிய தரவுகளை தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17) வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திடம் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை வெளியிட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

671 எம்பி சைசில், வெளியிடப்பட்டுள்ள அந்த தரவில் தேசிய, மாநில மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

2019ஆம் ஆண்டுக்கு முந்தைய விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளது.

https://www.eci.gov.in/ என்ற தேர்தல் ஆணைய இணையதளத்தில் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”தேர்தல் பத்திர ஊழல் பாஜகவை அம்பலப்படுத்தியுள்ளது” : ஸ்டாலின்

தேமுதிக விருப்ப மனு விநியோகம் எப்போது? : அறிவித்த பிரேமலதா

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *