மறைந்த பழம்பெரும் சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் 93ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவாக பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட வீணை ஒன்றினை திறந்து வைத்தார்.
இந்தியாவின் இசைக்குயில் என அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பன்மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்தி மொழியில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த நிலையில், லதா மங்கேஷ்கருடைய 93வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 28) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, அவரது நினைவாக பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட வீணை ஒன்றினை திறந்து வைத்துள்ளார்.
மேலும், அவரின் புகழை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள முக்கிய சந்திப்பில் 14 டன் எடையுள்ள 40 அடி வீணை சிலை நிறுவப்பட்டுள்ளது.
அதில், சரஸ்வதி தேவியின் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த மாபெரும் சிற்பத்தை பத்மஸ்ரீ விருது பெற்ற ராம் சுதாகர் வடிவமைத்துள்ளார்.
இதனை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 28) காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பிரதமர் மோடி, ’மறைந்த சகோதரி லதா மங்கேஷ்கரை அவரது பிறந்த நாளில் நினைவுகூறுகிறேன்.
இத்தனை ஆண்டுகளில் எண்ணற்ற முறை அவரிடம் உரையாடியுள்ளேன்.
என்னை சந்திக்கும்போதெல்லாம் அன்பு மழை பொழிவார். அவரைப் பற்றி நினைவுகூறுவதற்கு பல விஷயங்கள் உள்ளது.
அவரது பெயரில் அயோத்தியில் உள்ள ஒரு சாலை சந்திப்புக்கு அவரது பெயர் இன்று சூட்டப்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நாட்டில் சிறந்த மனிதர்களில் ஒருவரான அவருக்கு செலுத்தும் உரிய மரியாதை இது என்று கருதுகிறேன். இது சரியான அஞ்சலியாக இருக்கும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய கலாசார அமைச்சர் கிஷன் ரெட்டி, மாநில சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சர் ஜெய்வீர் சிங், லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜெ.பிரகாஷ்
அக்டோபர் 9ல் திமுக பொதுக்குழு!
மம்தா பானர்ஜி விரைவில் கைது?: பாஜகவால் பரபரக்கும் மேற்கு வங்கம்!