800 வழக்குகளுக்கு உதவிய நாய் இறப்பு : அரசு மரியாதையுடன் அடக்கம்!

இந்தியா

கர்நாடகா மாநில காவல்துறைக்குச் சொந்தமான கீதா என்ற நாயின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நேற்று (செப்டம்பர் 4 ) நடைபெற்றது.


கீதா என்று பெயரிடப்பட்ட அந்த நாய் மே மாதம் 21 ஆம் தேதி , 2011 ஆம் ஆண்டு பிறந்தது. 2011 ஆகஸ்ட் 19 ஆம் தேதி மங்களூருவில் உள்ள காவல் துறையின் குற்றப் புலனாய்வு படையில் வெடி பொருட்களை கண்டுபிடிக்கும் மோப்ப நாயாக நியமிக்கப்பட்டது.

இந்த நாய் லாப்ரடோர் ரெட்ரீவர் இனத்தைச் சார்ந்தது. அண்மைக்காலமாக புற்றுநோய் கட்டியினால் பாதிக்கப்பட்ட கீதா செப்டம்பர் 3 ஆம் தேதி இரவு உயிரிழந்தது.

ஹெட் கான்ஸ்டபிள்ளான ஹரிஷ், நாய் கீதா பற்றி கூறுகையில், பதினொரு ஆண்டுகளுக்கு முன்பு மோப்ப நாய்கள் குழுவில் சேர்ந்ததிலிருந்து நான் கீதாவை உடன் இருந்து கவனித்து வந்தேன் . அது ஒரு அன்பான மற்றும் நாம் சொல்வதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படும்.


வெடிபொருட்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றை மோப்பம் பிடித்து கிட்டத்தட்ட 800 வழக்குகளை முடித்துவைப்பதற்கு இது எங்களுக்கு உதவியுள்ளது. “மனிதனின் சிறந்த நண்பன் நாய் ” என்று எல்லோரும் சொல்வார்கள் அவர்கள் சொல்வதைப்போல் என்னுடைய சிறந்த நண்பனான கீதாவை பிரிவது உண்மையிலேயே மிகக் கடினமாக உள்ளது. இது காவல் துறையின் நாய்படைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு என்றே கூறவேண்டும்” என்றார்.

மேலும் , வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் மாநிலத்தில் நடக்கும் பிற பெரிய பொதுக் கூட்டங்களின் போதும் பாதுகாப்பு மற்றும் வெடிபொருள் கண்டறிதல் பணிகளில் முழுமையாக இந்த நாய் பயன்படுத்தப்பட்டது என்று கூறினார்.

கீதாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து டிசிபி தினேஷ் குமார் கூறுகையில், சுமார் 11 ஆண்டுகளாக குற்றப் புலனாய்வு படையில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்ததாகவும், பல வழக்குகளை கையாள உதவியது என்றும் கூறினார்.

மேலும், இரண்டு புதிய மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் சில மாதங்களில் அந்த இரண்டு மோப்ப நாய்களும் வெடிகுண்டு மற்றும் குற்றப் புலனாய்வு படையில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற இறுதிச் சடங்கில் டிசிபி (சிஏஆர்) சன்னவீரப்பா பி ஹடபடா, ஏசிபி (சிஏஆர்) ஏ எம் உபாசே, ஆர்பி-கார் பி வி காமத், ஆர்பி-சிஏஆர் எரசகப்பா தாலி உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் நாய் படை குழுவினர் கலந்து கொண்டனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.