சீனாவில் கடந்த சில வாரங்களாக திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளால் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதனையறிந்து ’பரவக்கூடிய புதிய தொற்று பாதிப்பு ஏதும் உள்ளதா?’ என WHO விளக்கம் கேட்ட நிலையில், சீனா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
தொற்று நோய் வெடிப்புகள் பற்றிய உலகளாவிய கண்காணிப்பு அமைப்பாக ப்ரோமெட்(ProMed) உள்ளது. இந்த அமைப்பு தற்போது சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு “கண்டறியப்படாத நிமோனியா” வேகமாக பரவி வருவதாக சமீபத்தில் எச்சரிக்கையை வெளியிட்டது அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 டிசம்பரில் கொரோனா தொற்று (SARs-CoV-2 ) வகை குறித்து உலக நாடுகளுக்கு முதன்முதலில் எச்சரிக்கை எச்சரித்தது ப்ரோமெட் தான்.
திணறும் மருத்துவமனைகள்!
அது வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன தலைநகர் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் உள்ள மருத்துவமனைகளில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வருகை அதிகரிப்பால் சிகிச்சையளிக்க முடியாமல் போராடி வருவதாக தைவான் FTV செய்திகள் தெரிவிக்கின்றன.
லியோனிங்கில் உள்ள டாலியன் குழந்தைகள் மருத்துவமனை நரம்பு வழியாக மருந்துகளைப் பெறும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளால் நிரம்பியுள்ளது.
பாரம்பரிய சீன மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருத்துவமனைகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெற்றோர்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் சிகிச்சைக்காக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த தொற்று பள்ளிகளில் அதிகமாக ஏற்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனினும் எப்போது இந்த தொற்று பாதிப்பு தொடங்கியது என்று தெரியவில்லை.
பெய்ஜிங் மற்றும் லியானிங் இடையே உள்ள தூரம் 800 கிமீ தூரம். இதனால் மர்மமான நிமோனியா உள்ளூர் பாதிப்பாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்று ProMed தெரிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக பல குழந்தைகள் இவ்வளவு விரைவாக பாதிக்கப்படும் நிலையில் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு அதிக உடல் வெப்பநிலை நிலை மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Indications of a large outbreak of viral respiratory disease in China. Videos are from various Chinese hospitals. Emergency room wait times are up to 24 hours. Deaths of children as well as the elderly have been reported.
Take precautions, the U.S. government won't protect you. pic.twitter.com/5BCatpzxpe— Dr. Lawrence Sellin (@LawrenceSellin) November 22, 2023
சீன தொற்றுநோயியல் நிபுணர் எரிக்-ஃபீகல்-டிங், மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வீடியோக்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளை தனது X பக்கத்தில் ஒரு நீண்ட த்ரெட் வெளியிட்டு உலக நாடுகளை எச்சரித்துள்ளார்.
ஒரு சீன டெய்லி அறிக்கையும், ‘பெய்ஜிங்கில் குழந்தைகள் மத்தியில் சுவாச தொற்று நோய் உச்சத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
தேசிய சுகாதார ஆணையத்தின் சீன அதிகாரிகள் நவம்பர் 13ஆம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, சுவாச நோய்களின் அதிகரிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டனர்.
சீனாவின் பிரபல ஊடக நிறுவனமான சின்ஹுவா, அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதையும், நோய் பாதிப்பிலிருந்து குழந்தைகளை காக்க பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்று செய்தி வெளியிட்டது.
கொரோனா தொற்றுக்கு பிறகு கடந்த மூன்றாண்டுகளாக கடுமையான லாக்டவுன் காணப்பட்ட நிலையில், இந்த வருடம் தளர்வினை அறிவித்தது . இதனால் கடுமையான கோவிட் லாக்டவுன் இல்லாத சீனாவின் முதல் குளிர்காலத்தில் இந்த புதிய நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பு கேள்வி!
இந்த பாதிப்பு குறித்து சீன அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிக்கை வெளியிடாத நிலையில், ப்ரோமெட் கடந்த 21ஆம் தேதி உலகநாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தது.
அதன் அடிப்படையில் சமீபத்திய இந்த கடுமையான தொற்று பாதிப்பு குறித்து சீனா அறிக்கை வெளியிடாததற்கு உலக சுகாதார அமைப்பு(WHO) கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய நோய்தொற்று பரவலால் மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை என்ன? என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் கூடுதல் தகவல்கள் வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு(WHO) சீனாவிடம் விளக்கம் கேட்டது.
சீனா விளக்கம்!
இந்த நிலையில், சர்வதேச விதிப்படி உலக சுகாதார அமைப்புக்கு 24 மணி நேரத்திற்குள் சீனா பதிலளித்துள்ளது.
அதில், “கடந்த டிசம்பர் மாதம் முதல் கோவிட் கட்டுபாடுகளை நீக்கிய நிலையில், மைக்கோப்ளாஸ்மா நிமோனியா போன்ற அறியப்பட்ட நோய்க்கிருமிகளின் சுழற்சியுடன் தற்போது நோய்தொற்று அதிகரித்து வருகிறது.
இது கடந்த மே மாதத்திலிருந்து பரவி வரும் ஒரு பொதுவான பாக்டீரியா தொற்று ஆகும். இன்ஃப்ளூயன்ஸா, சுவாச ஒத்திசைவு வைரஸ் (RSV) மற்றும் அடினோவைரஸ் ஆகியவை அக்டோபர் முதல் புழக்கத்தில் உள்ளன. குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர்கள் நோய்தொற்றின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதால், இதுவரை பயணம் மற்றும் வர்த்தகத்திற்கு எதிராக எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.
பெய்ஜிங்கின் தலைநகர் மற்றும் வடகிழக்கு மாகாணமான லியோனிங்கில் அசாதாரண நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, சீனாவில் உள்ளவர்கள் சுவாச நோய் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறு உலக சுகாதார அமைப்பு தற்போது பரிந்துரைத்துள்ளது.
ஏற்கெனவே கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவிய கொரோனா தொற்று அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மட்டுமின்றி உலகநாடுகள் அனைத்தையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் அங்கு குழந்தைகள் இடையே அதிகரித்து வரும் புதிய வகை நிமோனியா பாதிப்பானது சீனாவை தாண்டி உலக நாடுகள் இடையேயும் தற்போது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக்பாஸ்: விஷ்ணு-பூர்ணிமாவுக்கு FLAMES போட்டு பார்த்த மாயா… ரிசல்ட் என்ன?
ஆளுநர் வழக்கில் தீர்ப்பு: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!