“பாஜகவே எங்களின் மிகப்பெரிய எதிரி” என பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று (செப்டம்பர் 21) ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி மாநில தலைவர் ஜக்தானந்த் சிங், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், சோசலிஸ்ட் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் மேடையில் இருந்தனர்.
ஏற்கெனவே சரத் யாதவ், கடந்த மார்ச் 20ம் தேதி தம்முடைய லோக்தந்திரிக் ஜனதா தள கட்சியை, தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் இணைத்திருந்தார்.
இந்த நிலையில் ராஷ்ட்ரிய ஜனதா தள மாநில கவுன்சில் கூட்டத்தில் பேசிய லாலு பிரசாத் யாதவ், ”2024ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் பாஜகவை தூக்கி எறியும்.
சமூகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பதே பாஜக தலைவர்களின் செயல்திட்டமாகும். பல அரசியல் கட்சிகள் பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டன.
ஆனால் நான் குனியவில்லை. நான் எனது கொள்கையில் உறுதியுடன் நிற்கிறேன். இப்போது மட்டுமல்ல, எப்போதும் பாஜகவுக்கு நான் அடிபணிய மாட்டேன்.
பாஜகதான் எங்களின் மிகப்பெரிய எதிரி. அவர்களுக்கு நான் அடிபணிந்திருந்தால் இவ்வளவு நாள் சிறையில் இருந்திருக்க மாட்டேன். அவர்களிடமிருந்து நாம் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
செப்டம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளில் பீகாரில் நடைபெற இருக்கும் பேரணிகளில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்துகொள்ள இருக்கிறார்.
அமித் ஷாவின் வருகையால் முதல்வர் நிதிஷ் குமார் மிகுந்த கவனமுடன் இருக்கிறார்.
நான் நிதீஷ் குமாருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்திப்பேன். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதயாத்திரை முடிந்ததும் அவரையும் சந்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான டோராண்டா கருவூல மோசடி வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்த அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டுவந்துள்ள அவர், மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார்.
இதில், நேற்று பாட்னாவில் நடைபெற்ற ஆர்ஜேடி மாநிலங்களவை கூட்டத்தில் கலந்துகொண்ட லாலு, பாஜகவுக்கு எதிராகப் பேசியிருப்பது அரசியல் விமர்சகர்களிடையே விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
ஜெ.பிரகாஷ்
எம்.ஜி.ஆர். முதல் ஸ்டாலின் வரை: டிஜிபி அலுவலகத்தில் மரம் சொல்லும் கதை!