லாலு பிரசாத்தின் குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை இன்று (ஜூலை 31) வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,
“டெல்லி, காசியாபாத், பாட்னா ஆகிய பகுதிகளில் உள்ள லாலு பிரசாத்தின் குடும்பத்தினருக்கு தொடர்புடைய சொத்துகள் பிஎம்எல்ஏ சட்டப்படி முடக்கப்பட்டுள்ளன.
லாலு பிரசாத் மனைவி ராப்ரி தேவி, லாலு யாதவின் மகள் மிசா பார்த்தி, லாலுவின் மற்றொரு மகளான ஹேமா யாதவின் கணவர் வினீத் யாதவ் ஆகியோரது சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 6.02 கோடி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாலு மீதான வழக்கு என்ன?
2004-2009 காலகட்டத்தில், லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
குரூப் டி பணி நியமனத்துக்கு அவர் நிலத்தை லஞ்சமாக பெற்று தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
லாலு பிரசாத்துக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையும் சோதனை நடத்தியது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்கம், ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.600 கோடி மதிப்பிலான வருவாய்க்கான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன என்று அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்தசூழலில் சிபிஐ வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கியது.
இந்தியா கூட்டணியும் லாலுவின் பேச்சும்!
இதனிடையே உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் மீண்டும் தீவிரமாக அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகள் கூட்டணியான ‘இந்தியா’விலும் அங்கம் வகிக்கிறார்.
இந்நிலையில் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் லாலு பிரசாத் யாதவ்.
அப்போது அவரிடம் “இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி. அது இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய குவிட் இந்தியா கூட்டணி” என்று பிரதமர் விமர்சித்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த லாலு பிரசாத் யாதவ், “2024ல் தோற்ற பிறகு பிரதமர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆக இருக்கிறார். அதற்காகத் தான் அவர் வெளிநாட்டுக்கு சுற்றிக்கொண்டிருக்கிறார்.
எந்த நாட்டில் தான் நிம்மதியாக பீட்சா, மோமோஸ், செள மெய்ன் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம் எனத் தேர்வு செய்வதற்காக உலகம் சுற்றுகிறார்” என்று விமர்சித்திருந்தார்.
அவர் விமர்சித்த அடுத்த நாளே இன்று (ஜூலை 31) லாலு குடும்பத்தினரின் சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
பிரியா
காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை: 6000 பேருக்கு வேலைவாய்ப்பு!
டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!