குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 31 இந்தியர்களின் உடல்கள் இன்று (ஜூன் 14) கொச்சி விமான நிலையம் வந்தடைந்தது .
குவைத் தீவிபத்து
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜூன் 12ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 50 பேர்உயிரிழந்துள்ளனர்.
இந்த தீவிபத்து குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கட்டடத்தின் தரை தளத்தில் தங்கி இருந்த எகிப்து நாட்டு காவலாளியின் அறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, 48 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 45 பேர் இந்தியர்கள் எனவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில், இன்று காலை குவைத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் ஒரு இந்தியரும், மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது.
தமிழர்கள் 7 பேர் உயிரிழப்பு
இந்த தீவிபத்தில் உயிரிழந்தவர்களில் 23 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் எனவும், 7 பேர் தமிழர்கள் எனவும், மீதம் உள்ளவர்கள் ஆந்திரா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வீராசாமி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த சிவசங்கர், திண்டிவனம் பகுதியை சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ராஜூ எபநேசன், பேராவூரணியை சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பாக தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பாக தலா ரூ.5 லட்சம் நிவாரணமும், கேரளாவைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு கேரள அரசு சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவைத் நாட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றார்.
அங்குள்ள குவைத் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அலி அல்-யஹ்வாவை சந்தித்த பின்னர் கீர்த்தி வர்தன் சிங் பேசியதாவது, தீவிபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பவும், தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்கு தேவையான மருத்துவப் பராமரிப்பை வழங்கவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளவும் இந்திய அரசிற்கு குவைத் அரசாங்கம் முழு ஆதரவை வழங்கும் என குவைத் அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வெளியுறவுத்துறை இணையமைச்சர் வர்தன் சிங், குவைத்தின் முதல் துணை பிரதமர் ஷேக் ஃபஹத் யூசுப் செளத் அல்-சபா, பாதுகாப்புத்துறை, உள்துறை அமைச்சர் மற்றும் பிற மூத்த குவைத் அதிகாரிகளைச் சந்தித்து, அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர், தீவிபத்தில் சிக்கி காயமடைந்த இந்தியர்கள் சிகிச்சை பெற்று வரும் முபாரக் அல் கபீர் மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்தியா வருகை
இந்நிலையில், குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை விமானப்படை விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரும் பணிகள் நடைபெற்றது.
இதில் முதல்கட்டமாக, தீவிபத்தில் இறந்த 31 இந்தியர்களின் உடல்களை கொண்டு வரும் இந்திய விமானப்படை சிறப்பு விமானம் கேரள மாநிலம் கொச்சி விமானநிலையத்திற்கு இன்று (ஜூன் 14) வந்தது.
அதில், கேரளாவை சேர்ந்த 23 பேரின் உடலும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடலும், கர்நாடகாவை சேர்ந்த ஒருவரின் உடலும் கொண்டுவரப்பட்டது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் தமிழக அயலக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கொச்சி விமான நிலையத்தில் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தி உடலை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
கொச்சியில் இருந்து 7 தமிழர்களின் உடல்களை தமிழகத்திற்கு எடுத்து வரும் ஒவ்வொரு அவசர ஊர்திகளுக்கு முன்பாகவும் ஒரு காவல் வாகனம் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சில மணி நேரங்களில் தமிழகத்தை சேர்ந்த 7 பேரின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களை சென்றடையும்.
அதேபோல், தீ விபத்தில் உயிரிழந்த மீதமுள்ள இந்தியர்களின் உடல்களை எடுத்து வரும் மற்றொரு இந்திய விமானப்படை சிறப்பு விமானமானது இன்று (ஜூன் 14) மாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடையும் என மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
11ஆவது முறையும் தோல்வியை வரவு வைக்கணுமா?: ஓபிஎஸ் கேள்வி!
இத்தாலியில் பிரதமர் மோடி : உலகளாவிய சவால்கள் குறித்து விவாதம்!