குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 5 தமிழர்கள் உயிரிழந்திருக்கலாம் என வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று (ஜூன் 13) தெரிவித்துள்ளார்.
குவைத் தீவிபத்து
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஜூன் 12ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அதிகமாக தங்கி உள்ளனர். இந்த தீவிபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, எகிப்து நாட்டு காவலாளி தங்கிருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தது தான் தீவிபத்துக்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடுக்குமாடி கட்டடத்தின் கீழ்தளத்தில் அந்த காவலாளி தங்கியுள்ளார். சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 195 பேர் தங்கி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதில் 150க்கும் மேற்பட்டவர்கள் இந்தியர்கள் எனக் கூறப்படுகிறது. தீவிபத்தில் இருந்து 92 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், 20 பேர் இரவுப்பணிக்கு சென்றதால் தீவிபத்தில் சிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட நேரம் அதிகாலை 4 மணி என்பதால் சிலர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாலும், சிலர் தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும், சிலர் தீயில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து கீழே குதிக்க முயன்றதாலும் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கே.வி.சிங் தலைமையிலான குழு குவைத் நாட்டிற்கு விரைந்துள்ளது. அங்கு, கேரளாவை சேர்ந்த 3 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து மட்டும் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் மரபணு பரிசோதனை செய்யப்பட்டு யார் யார் உயிரிந்தவர்களின் விவரம் உறுதிசெய்யப்படும் என மத்திய இணையமைச்சர் கே.வி. சிங் தெரிவித்தார்.
அவசர உதவி எண்
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீவிபத்து குறித்த தகவலை அறிவதற்காக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் 965-65505246 என்ற உதவி எண்ணை அறிவித்திருந்தது.
தமிழக அரசு சார்பில், இந்தியாவிற்குள் 1800 309 3793 என்ற எண்ணையும், வெளிநாடுகளில் 80 6900 9900, 80 6900 9901 என்ற அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 தமிழர்களின் நிலை என்ன?
குவைத் நாட்டில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த 5 தமிழர்கள் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன.
அதில், ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூரைச் சேர்ந்த ராம கருப்பண்ணன் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக என்பிடிசி நிறுவனத்தில் அவர் வேலை செய்து வருவதாகவும், ஜூன் 11ஆம் தேதியுடன் விசா முடிவடைந்த நிலையில், சம்பளம் தொடர்பான கணக்குகளை முடித்துவிட்டு ராம கருப்பண்ணன் இந்தியா திரும்ப இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் பணிபுரிந்த கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை, பேராவூரணியைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த முகமது ஷெரிப், வீராசாமி உள்ளிட்டோரும் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.
அமைச்சருடன், முதல்வர் ஆலோசனை
குவைத் தீ விபத்தில் அயலக தமிழர் நலத்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு உடல்களை மீட்டுத் தரவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “குவைத் தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள தமிழ் சங்கம் வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது உறுதி செய்யப்படவில்லை.
இந்திய தூதரகம் சார்பாக தற்போது வரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் குவைத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.
உயிரிழப்புகள் உறுதி செய்யப்படுமானால், அவர்களது உடல்களை உடனடியாக தமிழகம் கொண்டுவந்து குடும்பத்தார்களிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணுவதில் சில சிக்கல்கள் உள்ளன. எனவே, உயிரிழப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதில் காயமடைந்த தமிழர்கள் குறித்த விவரங்கள் வெளியான பின்னர் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ள தமிழக அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என குறிப்பிட்டார் அமைச்சர் மஸ்தான்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்தடுத்து பயங்கரம்… கொலை நகரமாகிறதா சென்னை?
நீட் கருணை மதிப்பெண் ரத்து : உச்ச நீதிமன்றத்தில் தேர்வு முகமை பதில்!