கொல்கத்தா மருத்துவர் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. பழமையான இந்த அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒரு பெண் மருத்துவரின் உடல் அரை நிர்வாணமாக கண்டு எடுக்கப்பட்டது.
அந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இந்த சம்பவம் மேற்குவங்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது.
நாடு முழுவதும் கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
என்ன நடந்தது…
ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்நோயாளியாக 1500க்கும் அதிகமானோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தினசரி ஆயிரக்கணக்கான புற நோயாளிகளும் வந்து செல்வார்கள்.
250 எம்பிபிஎஸ் இடங்களும், 175 முதுநிலை இடங்களும் உள்ளன.
கடந்த 8ஆம் தேதி இரவு முதுகலை பயிற்சி பெண் மருத்துவர் பணியில் இருந்தார். இவர் கொல்கத்தாவில் இருந்து 20 கிமீ தொலைவில் இருந்து மருத்துவமனைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த அவர் மூன்றாவது மாடியில் உள்ள செமினார் ஹாலில் மறுநாள் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் அவருக்கு கழுத்தில் எலும்பு முறிந்து, பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதட்டில் காயங்கள் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் என்ன நடந்தது என விசாரணை மேற்கொண்டனர்.
இதில், காவல் துறையோடு இணைந்து பணியாற்றும் தன்னார்வலர் சஞ்சய் ராயை (33) கைது செய்தனர்.
இரவில் நடந்த கொடூரம்…. டைம்லைன்…
ஆகஸ்ட் 8ஆம் தேதி சஞ்சய் ராய் மருத்துவமனைக்கு வந்து சென்றது தெரியவந்திருக்கிறது. நோயாளி ஒருவருக்கு உதவுவது போல் வந்துள்ளார்.
அன்று இரவு 11 மணியளவில் மீண்டும் அந்த நோயாளியை பார்க்க வந்த சஞ்சய் ராய் சிறிது நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் மற்றொரு நோயாளிக்கு உதவுவது போல் மீண்டும் வந்திருக்கிறார். மருத்துவமனையில் நோயாளியின் உறவினர் ஒருவருடன் சேர்ந்து சஞ்சய் ராய் மது அருந்தியிருக்கிறார்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு நெஞ்சு தொடர்பான நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்படும் பகுதிக்கும், அதன்பிறகு அந்த பயிற்சி மருத்துவர் ஓய்வு எடுக்கும் செமினார் ஹாலுக்கும் சென்றிருக்கிறார்.
சுமார் 4 மணியளவில் அந்த பெண் மருத்துவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சஞ்சய் ராய், அந்த மருத்துவர் கத்தியதும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பித்திருக்கிறார்.
அதிகாலை 4.45 மணிக்கு சஞ்சய் ராய் மருத்துவமனையை விட்டு வெளியேறியது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
காலை 7.30 மணிக்கு பெண் மருத்துவர் செமினார் ஹாலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தங்கியிருந்த இடத்துக்கு சென்று உறங்கிவிட்ட சஞ்சய் ராய் அதன் பிறகே எழுந்து குற்றம் செய்தபோது உடுத்தியிருந்த உடையை துவைத்திருக்கிறார்.
எனினும் அவரது ஷூ உள்ளிட்ட உடமைகளில் ரத்த கறைகள் இருந்துள்ளன.
இவை எல்லாம் விசாரணையின் போது தெரியவந்ததாக கொல்கத்தா போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர்’ ஹசன் முஷ்டாக் கூறுகையில், “அந்த பெண் மருத்துவரின் உடலில் கடுமையான காயங்கள் இருந்தன. அதை பார்த்தால் ஒருவர் மட்டும் அந்த குற்றத்தை செய்தது போல தெரியவில்லை. காவல்துறை ஒருவரை மட்டும் கைது செய்துவிட்டு எங்கள் வேலையை முடித்துவிட்டோம் என்று சொல்வது எங்களது கோபத்தை அதிகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்தில் கிடைத்த ப்ளூடூத்
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட அந்த செமினார் ஹாலில் ஒரு உடைந்த ப்ளூடூத் ஹெட்செட் கிடைத்திருக்கிறது. அது கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயின் செல்போனில் கனெக்ட் செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
மருத்துவமனையின் அவசர பிரிவுக்குள் அந்த நபர் நுழையும் போது ப்ளூடூத் ஹெட்போன் அணிந்திருந்தார், வெளியில் செல்லும் போது அது இல்லை என்பது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
மருத்துவர்கள் தொடர் போராட்டம்
டெல்லி முதல் தமிழ்நாடு வரை போராட்டம்!
கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.
நேற்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கொல்கத்தா மருத்துவருக்கு நீதி கேட்டு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று (ஆகஸ்ட் 14) மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் பேரணியாக நடந்து சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியிடங்களில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மருத்துவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனிடையே தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எழுதிய கடிதத்தில், “இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை மேற்கு வங்க அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். உடனடியாக நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில், அகில இந்திய மருத்துவ சங்கங்களுடன் இணைந்து இந்திய அளவில் மிகப்பெரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களமிறங்கிய சிபிஐ
இந்தசூழலில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி வழக்கை கையில் எடுத்துள்ளது சிபிஐ. கைதாகியுள்ள சஞ்சய் ராய் மற்றும் வழக்கு ஆவணங்களை கொல்கத்தா போலீசார் சிபிஐயிடம் ஒப்படைத்தனர்.
அந்தவகையில்,
- பெண் மருத்துவரை ஒருவர் தான் வன்கொடுமை செய்து கொலை செய்தாரா?
- அல்லது பல பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா?
- சம்பவத்திற்குப் பிறகு ஆதாரங்கள் அழிக்கப்பட்டதா?
- முதலில் இந்த சம்பவத்தை தற்கொலை என சொன்னது ஏன்?
- இதில் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சம்பந்தம் உள்ளதா?
- மருத்துவர் கொலை செய்யப்பட்ட மறுநாள் காலையில் தாமதமாக ஏன் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது?
என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ கூறுகிறது.
நீதிமன்றத்தின் சந்தேகம்…
இதற்கிடையே கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்த போது, “ஒரு மருத்துவமனையின் முதல்வர் என்பவர் அங்கு பணியாற்றும் அனைத்து மருத்துவர்களின் பாதுகாவலர் ஆவார்” என்று குறிப்பிட்டதுடன்,
மாநில அரசு அந்த மருத்துவமனையின் முதல்வரை ஏன் காப்பாற்றுகிறது?” என்று கேள்வி எழுப்பியது.
‘மேற்குவங்க போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை. கொலை நடந்து 5 நாட்கள் ஆகியும் போலீசாரால் முழுமையான விவரங்களை வழங்க முடியவில்லை. வழக்கின் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த வழக்கில் ஏதோ ஒன்று விடுபட்டிருக்கிறது, அதாவது சம்திங் ஈஸ் மிஸ்ஸிங் என்று நீதிமன்றமும் கூறியுள்ளது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்போது சிபிஐ வழக்கை கையில் எடுத்திருக்கும் நிலையில் காலம் தாழ்த்தாமல் விரைவில் வழக்கை விசாரித்து உண்மை குற்றவாளிகளை கைது செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.
பெண் மருத்துவர் வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டாவை சந்தித்து FORDA மருத்துவர்கள் சங்கம் மனு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இந்திய அணி பந்துவீச்சு பயிற்சியாளராக கம்பீரின் நண்பர் நியமனம்!
”தலித் முதல்வராக முடியாது” : திருமாவளவன் சொன்னது சரிதான்… ஆனா இது பிடிக்கல… சீமான் பேட்டி!