கொல்கத்தா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை முதன்மை குற்றவாளி என கொல்கத்தா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வரும் 20ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயதான முதுகலை மருத்துவ பயிற்சி மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அங்கு தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவரை சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு ஆகஸ்ட் 10ஆம் தேதி கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.
எனினும் உரிய விசாரணை மற்றும் நீதிக்கேட்டு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை இறுதியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கிய விசாரணையானது, ஜனவரி 9ஆம் தேதி சஞ்சய் ராய்க்கு சிபிஐ மரண தண்டனை கோரியதுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் 57 நாட்கள் நீடித்த ரகசிய விசாரணைக்குப் பிறகு, மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முதன்மை குற்றவாளி சஞ்சய் ராய் தான் என சியால்டா மாவட்ட நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ் இன்று தீர்ப்பளித்தார்.
மேலும் வரும் 20ஆம் தேதி திங்கள்கிழமை சஞ்சய் ராய் மீதான தண்டனை அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிறையில் ஆர்ஜி கர் முன்னாள் முதல்வர்
இதற்கிடையில், முன்னாள் ஆர்ஜி கர் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் காவல்துறை அதிகாரி அபிஜீத் மோண்டல் ஆகியோர் மீது ஆதாரங்களை அழிக்க முயன்றதாகக் குற்றம் சாட்டி சிபிஐ கைது செய்தது.
எனினும், நிர்ணயிக்கப்பட்ட 90 நாள் காலக்கெடுவிற்குள் சிபிஐ அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியாததால் ஜாமீன் வழங்கப்பட்டது.
அதே வேளையில் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்கிலும் டாக்டர் கோஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா