கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ஒரு பெண் மருத்துவரின் உடல் அரை நிர்வாணமாக கண்டு எடுக்கப்பட்டது.
அந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் உறுதியானது. இந்த சம்பவம் மேற்குவங்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது.
நாடு முழுவதும் கொல்கத்தா பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சய் ராய் (33) என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கானது கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“கலைஞரின் தொலைநோக்கு பார்வையால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமானது”… ராகுல் புகழாரம்!
ஆவணி மாத நட்சத்திர பலன் – ரேவதி! (17.8.2024 முதல் 16.9.2024 வரை)