கொல்கத்தா மருத்துவர் கொலை : தீர்ப்பை வரவேற்ற குற்றவாளியின் தாய்!

Published On:

| By christopher

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை அளித்து கொல்கத்தா சியால்டா அமர்வு நீதிமன்றம் இன்று (ஜனவரி 20) தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயதான முதுகலை மருத்துவ பயிற்சி மாணவி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அங்கு தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவரை சம்பவம் நடந்த ஒரு நாளுக்குப் பிறகு ஆகஸ்ட் 10ஆம் தேதி கொல்கத்தா போலீசார் கைது செய்தனர்.

எனினும் உரிய விசாரணை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பு கோரி நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. அதன்படி நவம்பர் 12ஆம் தேதி முதல் தொடங்கிய விசாரணையானது, ஜனவரி 9ஆம் தேதி சஞ்சய் ராய்க்கு சிபிஐ மரண தண்டனை கோரியதுடன் முடிவடைந்தது.

இந்த நிலையில் 57 நாட்கள் நீடித்த ரகசிய விசாரணைக்குப் பிறகு, மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முதன்மை குற்றவாளி சஞ்சய் ராய் தான் என சியால்டா அமர்வு நீதிமன்ற நீதிபதி அனிர்பன் தாஸ் கடந்த 18ஆம் தேதி அறிவித்தார்.

தொடர்ந்து சஞ்சய் ராய்க்கு தண்டனை தீர்ப்பு விவரம் ஜனவரி 20ஆம் தேதி வழங்கப்படும் என்ற அறிவித்திருந்த நிலையில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.

அப்போது, இது ஒரு “அரிதிலும் அரிதான” வழக்கு என்றும், ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருக்கு இழைக்கப்பட்ட கொடூரம் என்றும் குற்றத்தின் தீவிரத்தை சிபிஐ வழக்கறிஞர் வலியுறுத்தினார். எனவே, நீதிமன்றத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார்.

எனினும் குற்றஞ்சாட்டப்பட்ட சஞ்சய் ராய், தான் நிரபராதி என்றும், போலீஸ் காவலில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டபோது தான் சித்திரவதை செய்யப்பட்டேன், அவர்கள் விரும்பியவற்றில் கையெழுத்திட என்னை கட்டாயப்படுத்தினர் என்றும் கூறினார்.

இதனையடுத்து நீதிபதி அனிபர்ன் தாஸ் அளித்த தீர்ப்பில், ”சிபிஐ சமர்ப்பித்த தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் உடலில் ராயின் டிஎன்ஏ இருப்பது உறுதியானது. பிஎன்எஸ் பிரிவுகள் 63, 64 மற்றும் 103 இன் கீழ் ராய் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும் இந்த வழக்கு “அரிதானவற்றில் அரிதான” வகைகளில் வராது. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு மாநில அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்புக்கு முன்னதாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராயின் 70 வயது தாய் மாலதி ராய் பேசுகையில், “அவர் குற்றவாளி என்றால், அது மரண தண்டனையாக இருந்தாலும் கூட, அவர் தண்டனைக்கு தகுதியானவர். நான் தனியாக அழுவேன், ஆனால் அதை ஏற்றுக்கொள்கிறேன். நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் எங்களிடம் இல்லை,” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share