கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் தற்போது கூறியுள்ள கூடுதல் வாக்குமூலம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி நகரத்தில் கிறிஸ்தவ மதத்தில் உள்ள ஒரு பிரிவான – யெகோவாவின் சாட்சிகளின் மூன்று நாள் மாநாடு கடந்த 27ஆம் தேதி தொடங்கியது.
ஜம்ரா சர்வதேச மையத்தில் மாநாட்டின் கடைசி நாளான நேற்று காலை 9.30 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருக்கும்போது அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் தீயில் கருகி பலியான நிலையில், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரிக்க கேரளா உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமையில்சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து என்ஐஏ மற்றும் இரண்டு அதிகாரிகளுடன் என்எஸ்ஜியும் விசாரணைக்காக குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற களமச்சேரிக்கு வந்துள்ளது.
சரணடைந்த மார்ட்டின் ஒப்புதல்!
இதற்கிடையே இந்த குண்டுவெடிப்பை தான்தான் நிகழ்த்தியதாக களமச்சேரிக்கு 45 கிமீ தொலைவில் உள்ள திருச்சூரில் அருகே இருக்கும் கொடகர காவல் நிலையத்தில் தம்மன்னம் பகுதியை சேர்ந்த டொமினிக் மார்டின் நேற்று சரணடைந்தார்.
அவர் ஏற்கெனவே தனது பேஸ்புக் பக்கத்தில் குண்டு வைத்ததற்கான காரணத்தை 6 நிமிட வீடியோவாக அவர் பதிவிட்டுள்ளார்.
அதில், 16 ஆண்டுகளுக்கு முன் யெகோவாவின் சாட்சிகள் சபையில் உறுப்பினராக இணைந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களின் போதனைகள் ‘தேச விரோதமாக’ இருப்பது போல் உணர்ந்தேன் என்றும்,
இதுபோன்ற பிரசங்கத்தை நிறுத்துமாறு தான் கூறியதை சபை தலைமை செவிசாய்க்க மறுத்ததால் தான் இப்படி செய்தேன் என்றும் கூறியிருந்தார்.
3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இதனையடுத்து, டொமினிக் மார்டின் வீட்டில் போலீசார் சோதனை செய்த போது அவருடைய மொபைல் மற்றும் லேப்டாப்பில் கூகுள், யூடியூப் பிரவுசிங் ஹிஸ்டரியை ஆராய்ந்ததில் வெடிகுண்டை தயாரிக்கும் நுட்பங்களை கற்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது. மார்ட்டினிடம் செல்போனில் வெடிகுண்டை வெடிக்கப் பயன்படுத்தப்படும் ரிமோட் கண்ட்ரோலின் காட்சிகள் இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து சரணடைந்த மார்ட்டின் மீது ஐபிசி 302, 307 மற்றும் யுஏபிஏ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள்!
இந்த நிலையில் டொமினிக் மார்ட்டின் தற்போது போலீசாரிடம் அளித்த கூடுதல் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதில், “பிரார்த்தனை கூடத்தில் குண்டு வைக்க மொத்தம் ரூ.3000 செலவு செய்தேன். திருப்புனித்துராவில் உள்ள பட்டாசுக்கடையில் 50 பட்டாசு வாங்கினேன்.
வெடிமருந்தை வைத்து டெட்டனேட்டர் செய்வது எப்படி என யூடியூப்பில் கற்றேன். கொச்சியை அடுத்த ஆலுவா பகுதியில் உள்ள தனது மனைவியின் இல்லத்தில் வைத்து வெடிகுண்டுகளை தயார் செய்தேன்.
நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் மனைவியின் வீட்டில் இருந்து கிளம்பி களமச்சேரி பகுதிக்கு வந்தேன். பின்னர் காலை 7 மணியளவில் அரங்கில் வெடிகுண்டுகளை பிளாஸ்டிக் பையுடன் வைத்தேன் என்று மார்ட்டின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து மார்ட்டின் கூறிய வாக்குமூலத்தினை உறுதி செய்ய போலீசார், தொடர்புடைய இடங்களில் மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும் மார்ட்டின் பல ஆண்டுகளாக துபாயில் தங்கி வேலை பார்த்து வந்ததும், அவர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் இந்தியா திரும்பி, உள்ளூர் மக்களுக்கு ஆங்கிலம் கற்பித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!
குண்டுவெடிப்பில் சிக்கி 50 பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்று மாலையில் ஒரு பெண் உயிரிழந்தார். அவரையடுத்து 95 சதவீத தீக்காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 12வயது சிறுமியும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குண்டுவெடிப்பு சம்பவத்தில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
கேரளா குண்டுவெடிப்பை தொடர்ந்து கேரளாவை ஒட்டிய தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களிலும், டெல்லி மற்றும் மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரதமராகும் லட்சியம்? மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!
பசும்பொன்னில் எதிர்ப்பு… தொண்டர்கள் சூழ முத்துராமலிங்க தேவருக்கு எடப்பாடி மரியாதை!
RSS ஐ விசாரிங்க போலீஸ்கார்.