இணையம் முடக்கம்… குவியும் ராணுவம்… பதற்றத்தில் பஞ்சாப்!

இந்தியா

பஞ்சாபில் பிரிவினைவாதம் பேசிவந்த அம்ரித்பால் சிங்கை கைது செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அங்கு நாளை (மார்ச் 20) மதியம் வரை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சீக்கியர்கள் அதிகம் வசித்து வரும் பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக இதுகுறித்து பேச்சு எழாத நிலையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் மீண்டும் காலிஸ்தான் பிரிவினைவாதம் தலைதூக்க தொடங்கி உள்ளது.

துபாயில் வேலை செய்து வந்த ’வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு திரும்பியதை தொடர்ந்து காலிஸ்தான் பிரிவினைவாதம் குறித்து பேசி வருகிறார்.

இவர் சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் அஜ்னாலா காவல் நிலையத்தில் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான். அப்போது அம்ரித்பால் சிங் பற்றி பேசப்பட்டதாக கூறப்பட்டது.

நேற்று பஞ்சாப்பில் ஜி20 மாநாட்டுக்கான கூட்டங்கள் முடிவடைந்த நிலையில் பிரிவினைவாதம் பேசி வரும் அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு உள்ளூர் போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவத்தினரும் பஞ்சாபில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள அம்ரித்பால் சிங் ஆதரவாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பஞ்சாப் போலீஸ் தீவிரமாக இறங்கியுள்ளது.

நேற்று இரவு அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “வாரிஸ் பஞ்சாப் டி அமைப்புக்கு எதிரான மெகா அடக்குமுறைக்குப் பிறகு இதுவரை 78 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

இந்த நடவடிக்கையின் போது 8 துப்பாக்கிகள், ஒரு ரிவால்வர் உட்பட ஒன்பது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்குள் உள்ளது, வதந்திகளை நம்ப வேண்டாம்” என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் போலீசார், அவரது ஆதரவாளர்கள் 4 பேரை கைது செய்து அஸ்ஸாமில் உள்ள திப்ருகார் மத்திய சிறையில் அடைக்க விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

மேலும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அம்ரித்பால் சிங் தப்பியோடுவதை தடுக்கும் முயற்சியாக இமாச்சலப் பிரதேசம் – பஞ்சாப் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக பதற்றத்தை தணிக்க இன்று மதியம் வரை இணைய சேவை மற்றும் மொபைலில் குறுந்தகவல்கள் ஆகியவை முடக்கப்பட்டன. இந்நிலையில் நாளை மதியம் வரை இணைய முடக்கம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: எல்லோருக்கும் ஏற்றவையா சிறுதானிய உணவுகள்?

முதல்வர் அறிவிப்பு: இன்று பெண் காவலர்கள் அணிவகுப்பு!

khalistani amritpal singh arrested
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *