‘வாரிஸ் பஞ்சாப் டே’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கைக் கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து கடந்த 20-ஆம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிலுள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக்கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது வாஷிங்டனில் இருக்கும் தூதரகத்துக்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கடந்த 22-ஆம் தேதி இந்திய தூதரகம் முன் காலிஸ்தானியர்கள் ஒன்று திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. அவர்கள், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார் அவர்களை கட்டுப்படுத்தும் வகையில், தடுப்புகளை அமைத்தனர். ஆனால், அவற்றை நீக்கி விட்டு, தொடர்ந்து கோஷம் எழுப்பினர்.
இதனால், அந்த பகுதியில், பாதுகாப்புக்காக போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியே லண்டன் பெருநகர போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தினர்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால், காலிஸ்தானியர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், அவர்கள் கோஷங்களை எழுப்பியபடியும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய துணிகளை ஏந்தியபடியும் காணப்பட்டனர். அவர்கள் தூதர் மற்றும் தூதரக பணியாளருக்கு மிரட்டல் விடுத்தும் உள்ளனர். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரண்ஜீத் சிங் சந்துவை அவர்கள் மிரட்டி உள்ளனர். தூதரகத்தில் பணியில் இருந்த ஊழியரையும் மிரட்டி உள்ளனர்.
போராட்டத்தின்போது, இந்த போலி நாடகம் ஒரு முடிவுக்கு வரும் என அறிவித்ததுடன், உங்களது கார் கண்ணாடிகள் நொறுங்கும் நாள் வரும். தூதரகத்தில் உள்ளவர்கள் எங்கும் தப்பி செல்ல முடியாது என அச்சுறுத்தலும் விடுத்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடு முழுவதும் அனைத்து சமூகத்தினரையும் இந்திய அரசாங்கம் கொன்று வருகிறது என வெற்று முழக்கங்களையும் எழுப்பினர்.
சிறுவர், முதியவர் என வயது வித்தியாசமின்றி, பெண்கள் உள்பட அனைத்து தரப்பு காலிஸ்தானியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் வாஷிங்டன், மேரிலேண்ட், விர்ஜீனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்து உள்ளனர். இதை செய்தியாக்கிக்கொண்டிருந்த தனியார் செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா என்பவர், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதுகுறித்து அந்த ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி. அவர்களின் பாதுகாப்பால்தான் எனது வேலையைச் செய்ய முடிந்தது, இல்லையெனில் நான் இதை மருத்துவமனையிலிருந்து பதிவிட்டுக்கொண்டிருப்பேன்” எனக் குறிப்பிட்டு ஒரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவில், “நீங்கள் இந்திய அரசிடம் புகார் செய்யுங்கள்” என்று காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர் வீடியோ எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்து, லலித்தைத் தாக்குகிறார். ஊடகவியலாளர் லலித் மீதான தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
அதில், “வாஷிங்டன் டி.சி-யில் காலிஸ்தான் ஆதரவு போராட்டத்தின்போது, இந்திய மூத்த பத்திரிகையாளர் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்படுவதைக் கண்டோம். பத்திரிகையாளர் முதலில் வாய்மொழியாக மிரட்டப்பட்டார், பின்னர் உடல்ரீதியாகத் தாக்கப்பட்டார். தாக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு, சட்ட அமலாக்க நிறுவனங்கள் உடனடியாக பதிலளித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் இந்தச் சம்பவம் குறித்து தூதரகம், “ஒரு மூத்த பத்திரிகையாளர் மீதான இத்தகைய கடுமையான மற்றும் தேவையற்ற தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள், காலிஸ்தான் ஆதரவாளர்களின் வன்முறை மற்றும் சமூக விரோதப் போக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த விவகாரத்தில் சட்ட அமலாக்க முகவர் உடனடியாக பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறது.
ராஜ்
ராகுல்காந்தி பிரதமர் ஆவதை பாஜகவால் தடுக்க முடியாது : ஜோதிமணி எம்.பி
ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வரை போராடுவோம்: ஆ.ராசா