உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகாகும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் இறந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 60 பேர் காயமடைந்துள்ளனர். அடுத்து, இது போன்ற சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக உத்தரபிரதேச அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதையடுத்து, 5 முக்கிய முடிவுகள் கும்பமேளாவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இனிமேல் கும்பமேளா பகுதிக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. வாகனங்கள் இல்லாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
வாகனங்கள் உள்ளே நுழைய எந்த வகையிலும் சிறப்பு பாஸ் வழங்கப்பட மாட்டாது.
பக்தர்கள் செல்லவும் வெளியே வரவும் தனி தனி ஒன்வே பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்களில் இருந்து பிரயாக்ராஜ் மாவட்டத்துக்குள் வரும் வாகனங்கள் எல்லையிலேயே நிறுத்தப்படும். மாவட்ட எல்லைக்குள் அனுமதி கிடையாது. நெரிசலை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 4 ஆம் தேதி வரை பிரயாக்ராஜ் நகருக்குள் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது.
அதோடு, கூட்ட நெரிசலை கையாள்வதில் அனுபவம் பெற்ற இரு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் கும்பமேளா பகுதியில் முகாமிட்டு நடவடிக்கைகளை கண்காணிக்கின்றனர். பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால், கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வேக்கு உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் குறித்து ஆராய 3 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஹர்ஸ் குமார், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி வி.கே. குப்தா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வி.கே. சிங் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.