Kerala women police breastfeeds child
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் திருவள்ளுவர். அவரது கூற்று இப்போதும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறை என்றாலே அவர்களது கொடுமை, சித்திரவதை போன்ற நெகட்டிவ் தனமான செய்திகளுக்காகவே அடிக்கடி நினைவு கூறப்படுவார்கள், விமர்சிக்கப்படுவார்கள். அதேநேரம் காக்கிச் சட்டைகளுக்குள்ளும் கருணை உள்ளம் நிரம்ப இருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது கேரளாவில் நடந்த சம்பவம்.
கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் எம்.ஏ. ஆர்யா, பசியுடன் இருந்த நான்கு மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தது தான் இந்தியா முழுதும் இன்று பார்ப்பவர்களின் கண்களில் ஈரத்தை ஏற்படுத்துகிறது.
பிகாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் கேரளாவின் கொச்சி என்கிற எர்ணாகுளம் பகுதியில் குடியிருந்தது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். சமீபத்தில் அந்த குழந்தைகளின் தந்தை ஒரு குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நான்கு குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அந்த பிகார் தாய் கேரளாவில் வாழ்வை நகர்த்தி வந்தார். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் நவம்பர் 23-ஆம் தேதி, எதிர்பாராத விதமாக அந்த பெண்ணுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
தனது நான்கு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அந்த பிகார் பெண் கொச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். 13 வயது குழந்தை தொடங்கி, கடைக் குட்டி குழந்தைக்கு 4 மாதமே ஆகியிருந்தது.
ஆஸ்பத்திரி படுக்கையில் நெஞ்சு வலியால் துடித்த தாயை ஒட்டிக்கொண்டு அந்த நான்கு மாதக் குழந்தை அழுது கொண்டிருந்தது. இதய நோயால் பாதிக்கப்பட்ட தாயை, அவரது குழந்தைகளை பொறுப்பான ஒருவரிடம் ஒப்படைத்த பின்னரே, ஐசியுவுக்கு மாற்ற முடியும்.
குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறையின் உதவியை மருத்துவமனை அதிகாரிகள் நாடினர். கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் சென்றதும், அங்கே இன்ஸ்பெக்டர் ஆனி சிவா தலைமையில் ஒரு பெண் போலீஸ் குழுவினரை மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். உடனடியாக அந்த நான்கு குழந்தைகளையும் போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அந்த பெண்ணுக்கு சிகிச்சை தொடங்கியது.
அந்த நான்கு குழந்தைகளையும் கொச்சி நகர மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, அதன் பின் ஹோமுக்கு அனுப்பத் திட்டமிட்டனர் போலீஸார். அதன்படி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது 13 வயது குழந்தை மற்றும் இரு குழந்தைகளுக்கு உணவு வாங்கிக் கொடுத்தனர். அவர்கள் சாப்பிட்டனர். ஆனால் கடைக் குட்டி குழந்தைக்கோ 4 மாதம்தான் ஆகிறது. அந்த குழந்தை தனது தாயின் அரவணைப்பு இல்லாததாலும் பசியாலும் தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது.
அந்த நான்கு மாத குழந்தையின் அழுகை காவல் நிலையத்தின் சுவர்களில் எதிரொலித்தது. நிற்காமல் அழுதுகொண்டிருந்த குழந்தை அனைவரின் இதயத்தையும் உடைத்தது. மற்ற குழந்தைகள் போல இந்த குழந்தைக்கு இட்லி வாங்கிக் கொடுக்க முடியாது. காரணம் அந்த 4 மாதக் குழந்தைக்கு இப்போதைய ஒரே உணவு தாய்ப்பால் தான்.
சட்டென யோசித்தார் பெண் போலீஸ் ஆர்யா. அந்த நான்கு மாத குழந்தையைத் தூக்கிக் கொண்டு தனி அறைக்கு சென்றார். சீருடையில் இருந்த அவர், அந்த நான்கு மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கத் தொடங்கினார். சில நிமிடங்களில் அந்த குழந்தையின் பசி ஓலம் மெல்ல மெல்ல அடங்கியது. குழந்தை தனக்கு பால் கொடுத்த அந்த பெண் போலீஸ் ஆர்யாவை பார்த்து சின்ன ரோஜா இதழ்களால் புன்னகை பூத்தது. சட்டென அந்த காவல் நிலையமே கருணை இல்லமாக மாறிவிட்டது.
பெண் போலீஸார் ஒவ்வொருவராய் அந்த குழந்தையை வாங்கிக் கொஞ்சத் தொடங்கினார்கள். ஆர்யாவின் இந்த செயலைப் பார்த்த சக பெண் போலீஸார் நெகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் உருகிவிட்டனர்.
எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றியிருக்கிறார் கொச்சி நகர மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனி சிவா.
அந்த பதிவில், “எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்னாவை சேர்ந்த தாயின், 4 குழந்தைகளை கவனிக்க ஆள் இல்லாததால், காலை கொச்சி நகர மகளிர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். மற்ற மூன்று குழந்தைகளுக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு, 4 மாதக் குழந்தைக்கு என்ன ஊட்டுவது என்ற கேள்வி எழுந்தபோது, பாலூட்டும் தாய் ஆர்யா முன் வந்தார்.
வயிற்றில் சுமக்கவில்லை என்றாலும் தாய்ப்பாலை குழந்தையின் நாக்கில் வைத்து குழந்தைக்கு தாயானார் ஆர்யா. குழந்தைகள் சிசு பவனுக்கு மாற்றப்பட்டன” என்று பதிவிட்டுள்ளார் இன்ஸ்பெக்டர் ஆனி சிவா.
மலரொளியே… மந்தார மலரே…மஞ்சாடி மணியே… சாஞ்சாடு அழகே… லாலி லாலி என்ற மலையாள பாடலோடு அந்த வீடியோவையும் பதிவேற்றியுள்ளார் இன்ஸ்பெக்டர் ஆனி சிவா.
ஆர்யா, ஒன்பது மாத குழந்தைக்குத் தாய். மகப்பேறு விடுமுறை முடிந்து அவர் பணியில் சேர்ந்து 3 மாதம் தான் ஆகிறது. இப்போதும் அவர் தனது குழந்தைக்கு பாலூட்டி வருகிறார். காவல்நிலையத்தில் யார் என்றே தெரியாத அந்த நான்கு மாத குழந்தையின் பசி ஓலம், அந்த போலீஸுக்கு உள்ளே இருந்த தாயை தட்டி எழுப்பிவிட்டது.
இன்று கேரளா தாண்டி இந்தியா முழுவதிலும் இருந்தும் காவல் தாய்க்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இளைஞரணி மாநாடு டொனேஷன்: மாசெக்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
அண்ணாமலையிடம் மன்னிப்பு கேட்க முடியாது: மனோ தங்கராஜ்
Kerala women police breastfeeds child