வெளியூர் பயணம் செய்யும் போது, நியாயமான கட்டணத்தில் ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணிப்பது பெரும் சவாலாக உள்ளது. மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தனியார் டாக்ஸி ஆப் சேவைகள் பயணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதில்லை. சில நேரங்களில் ஓட்டுநர்கள் பயணிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே செயல்படுத்தி வரும் ஆன்லைன் டாக்ஸி சேவையை கேரள மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி கேரள மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் அதன் பரிசாக, ‘கேரள சவாரி’ என்ற திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடகைக்கு பேரம் பேசாமல் பயணிகள் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் பயணிக்க ‘கேரள சவாரி’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிற்சாலைகள் சார்பில் மோட்டார் தொழிலாளர் வருங்கால வைப்பு வாரியத்தால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. தனியார் ஆன்லைன் டாக்ஸி சேவைகளுக்கான சேவைக் கட்டணம் 25 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் நிலையில், இந்தத் திட்டம் 8 சதவீத சேவைக் கட்டணத்துடன் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பிற்காக, போலீசிடம் அனுமதி பெற்ற ஓட்டுநர்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டூரிஸ்ட் கைடுகளாக செயல்பட ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பல நல்ல அம்சங்களை கொண்டுள்ளது.

இதுகுறித்து, கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், ‘நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும்.
இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும்’ என்று கூறியுள்ளார்.
மேலும், தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்ஸி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை உதவிகரமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

பீக் ஹவர்ஸ், ஆஃப் பீக் ஹவர்ஸ் என இரு மடங்கு கட்டணங்களை தனியார் டாக்ஸி நிறுவனங்கள் வசூலிப்பது வழக்கம்.
ஆனால் கேரளா சவாரி பிளானில் எப்போதும் ஒரே கட்டணமே வசூலிக்கப்படும் . ஓட்டுநர் அல்லது பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் முன்பதிவை ரத்து செய்யும் வசதி உள்ளது. அதற்கு, சிறிய அபராதம் செலுத்த வேண்டும்.
அவசர உதவிக்காக கேரளா சவாரி செயலியில் ஒரு எச்சரிக்கை பட்டன் வழங்கப்படுகிறது. பயணிகள் மட்டுமின்றி ஓட்டுநரும் எச்சரிக்கை பட்டனை அழுத்தலாம். பேனிக் பட்டனை அழுத்தினால், காவல்துறை, தீயணைப்புத் துறை, மோட்டார் வாகனத் துறை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க ஒரு விருப்பம் கிடைக்கும். அந்த பட்டனை கிளிக் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட துறைக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
எந்த விருப்பமும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், போலீசார் அறைக்கு எச்சரிக்கை அனுப்பப்படும். பாதுகாப்புக்காக வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் சேரும் வாகன ஓட்டிகளுக்கு டீசல் , வாகனக் காப்பீடு, டயர்கள், பேட்டரிகள் போன்றவற்றில் அந்தந்த முகவர்கள் மூலம் தள்ளுபடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாடகை கார்களை இயக்கும் முயற்சியில் தமிழக அரசு ஆலோசனை – மனோ தங்கராஜ்