கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கலைச் சேர்ந்தவர் ஷைன் குமார்.
இந்திய ராணுவ வீரரான இவர் கடந்த 24ஆம் தேதி இரவில் வீட்டிலிருந்தபோது, அடையாளம் தெரியாத 6 பேர் ஷைன்குமாரை அருகிலுள்ள ரப்பர் தோட்டத்தில் தூக்கி சென்று தாக்கியதாகவும், அவரது கைகளை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், அவரது முதுகில் பச்சை நிற மையினால் பிஎஃப்ஐ(PFI) என எழுதியதாகவும் புகார் கூறப்பட்டது.
ராணுவ வீரர் ஷைன் குமாரின் டீசர்ட் கிழிக்கப்பட்டு முதுகில் பிஎஃப்ஐ என்று எழுதப்பட்டிருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து ராணுவ வீரர் மீதான தாக்குதலும், அவர் கொடுத்த புகாரும் தேசிய ஊடகங்களில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
இஸ்லாமிய மக்களுக்கான சேவை அமைப்பாக அறியப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) கடந்த செப்டம்பரில் தடை செய்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த தடை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
மேலும் அதே நாளில், பிஎஃப்ஐ இந்தியா அமைப்புடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக, கேரளாவில் அமலாக்கத்துறை சோதனை செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியா ராணுவ வீரர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற வலுவான சந்தேகம் எழுந்தது.
இதற்கிடையே இந்த சம்பவத்தை அடுத்து உடனடியாக விசாரணையை தொடங்கிய கொல்லம் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
முதலில் இதுதொடர்பாக ராணுவ வீரர் ஷைன் குமார் மற்றும் அவரது நண்பர் ஜோஷியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இருவருமே தடுமாறியபடி பதில் அளித்துள்ளனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ராணுவ வீரரின் புகார் போலியானது என்றும், தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காக ஷைன்குமார் இந்த செயலை திட்டமிட்டு செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவரது நண்பர் ஜோஷி அளித்த வாக்குமூலத்தில், “தேசிய அளவில் விளம்பரம் பெறுவதற்காக ஷைன் குமார் இதனை செய்ய என்னை தூண்டினான்.
ஷைன் தனது சட்டையைக் கிழித்து முதுகில் “PFI” என்று எழுதுமாறு அறிவுத்தினான். ஆனால் நான் அப்போது குடி போதையில் இருந்ததால், தவறாகப் புரிந்து கொண்டு முதலில் “டிஎஃப்ஐ” (DFI) என்று எழுதினேன். பின்னர் அதனை PFI ஆக மாற்றினேன்.
தொடர்ந்து அவன், தன்னை அடித்துவிட்டு, வாய் மற்றும் கைகளை கட்டிபோட்டு தரையில் போட்டு அங்குமிங்கும் இழுக்குமாறும் கூறினான். நானும் அதை செய்தேன்” என்று ஜோஷி கூறினார்.
இதனையடுத்து விளம்பரத்திற்காக நாடகமாடிய இருவரையும் கைது செய்த கொல்லம் போலீசார், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் பச்சை பெயிண்ட், பிரஷ் மற்றும் டேப்பை ஜோஷியின் வீட்டில் இருந்து கைப்பற்றினர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கொல்லம் ஊரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பிரதாபன் நாயர், “குற்றம் சாட்டப்பட்ட வீரரையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களது புகார் போலியானது. தேசிய கவனத்தை ஈர்த்து, ராணுவத்தில் உயர்பதவியை பெறுவதற்காக நாடகமாடியுள்ளனர். இருவரும் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்கள்” என்று நாயர் கூறினார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷைன் குமார், இந்திய ராணுவத்தின் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் (EME) பிரிவில் வேலை செய்து வருகிறார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கத்தை குறி வைக்கும் ஷூட்டர்: யார் இந்த ரமிதா ஜிண்டால்?
சென்னை புறநகரில் டிஸ்னி தீம் பார்க்!