என்.ஐ.ஏ சோதனையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) இன்று (செப்டம்பர் 23) பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறது.
இதில் கேரளாவில் அரசு பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது.
பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, நிதி வழங்குகிறது என்பது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான முக்கிய குற்றசாட்டு.
கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி பிரதமர் மோடி பாட்னாவுக்கு சென்ற போது, அவரை கொல்ல திட்டமிட்டதாக அதர் பர்வேஸ் மற்றும் எம்டி ஜலாலுதீன் ஆகிய இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் இவர்களுக்கும் பிஎஃப்ஐ அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக காவல் துறை தரப்பில் சொல்லப்பட்டது.
இதுபோன்று பல குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பு மீது உள்ளது. குறிப்பாக இந்த அமைப்புக்கு எப்படி நிதி வருகிறது என்பது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடத்துகிறது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 23) நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், 95 இடங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சோதனையை நடத்தியது தேசிய புலனாய்வு முகமை.
அதுபோன்று எஸ்.டி.பி.ஐ கட்சி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதில் தமிழகத்தில் 11 பேர் உட்பட மொத்த 106 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு பிஎஃப்ஐ அமைப்பும், எஸ்டிபிஐ கட்சியும் கண்டனம் தெரிவித்தது.
‘பிஎஃப்ஐ அமைப்பின் தேசிய செயற்குழு, ‘பழிவாங்கும் நோக்கத்தோடு இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
என்ஐஏவின் ஆதாரமற்ற கூற்றுக்கள், பயங்கரவாத சூழலை உருவாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
மத்திய அமைப்புகளைத் தனது கைப்பாவையாகப் பயன்படுத்தும் ‘சர்வாதிகார’ ஆட்சி நடக்கிறது. இத்தகைய செயலுக்கு பிஎஃப்ஐ ஒரு போது அஞ்சாது’ என்று கண்டனம் தெரிவித்தது.
பிஎஃப்ஐ அமைப்பின் கேரள மாநில பொதுச்செயலாளர் அப்துல் சத்தார், “ஆர்.ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் மத்திய அரசு செயல்படுகிறது.
சிறுபான்மையினர் அமைப்புக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் ஏவப்படுகின்றன. இதனைக் கண்டித்து செப்டம்பர் 23ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில் கேரள அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகிறது.
இந்நிலையில் அலுவா பகுதியில் அரசு பேருந்து மீது பிஎஃப்ஐ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். கோழிக்கோடு பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆலப்புழா பகுதியில் இரண்டு லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில் கோழிக்கோடு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருந்து ஓட்டுநர் காயமடைந்தார். அவர் பீச் மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்து செல்லப்பட்டார்.
கட்டக்கடை பகுதியில் சாலையில் சென்ற வாகனங்களை பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொச்சி உள்ளிட்ட நகரங்களில் முழு அடைப்பு மற்றும் தாக்குதல் எதிரொலி காரணமாகத் தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதுபோன்று பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பிஎஃப்ஐ அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தார் உள்ளிட்டோர் மீது கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தச்சூழலில் எந்த ஒரு கடையையும் வலுக்கட்டாயமாக மூட வற்புறுத்தக் கூடாது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் நடந்துகொண்டால் உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள போலீஸ் எச்சரித்துள்ளது.
முழு அடைப்பு காரணமாகக் கேரளாவில் உள்ள பல்கலைக் கழகங்கள் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்வுகளை செப்டம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளன.
இந்த முழு அடைப்பு தேவையற்றது என்று தெரிவித்துள்ள கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன், சட்டம் ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மீது பினராயி விஜயன் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் அசோக் கெலாட்
பெட்ரோல் குண்டு வீசியது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா