கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைத்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவின் கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (ஏப்ரல் 2) இரவு ஆலப்புழா- கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. கோழிக்கோடு ரயில் நிலையத்தை கடந்த நிலையில் ரயில் சென்று கொண்டிருந்த போது பயணிகளில் ஒருவர் சக பயணி மீது தீ வைத்து எரித்து கொல்ல முயன்றார்.
இச்சம்பவத்தில் பயணிகள் 9 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. மேலும் போலீசார் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்ட போது தண்டவாளத்தில் 3 உடல்கள், தீக்காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டன. அதில் ஒரு குழந்தையும் அடங்கும். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
உடனடியாக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு அதிகாலையில் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் அங்கிருந்து தப்பி பைக் ஒன்றில் ஏறிச் சென்றதாக பயணி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார். அந்த நபர் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த பைக் கோழிக்கோடு கூராச்சுண்டை பகுதியை சேர்ந்தது என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் இலத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கேட்பாரற்று பை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அதில் பெட்ரோல் பாட்டில், டைரி, துண்டு பிரசுரம், மொபைல் ஃபோன், துணி ஆகியவை இருந்துள்ளது.
அந்த டைரியில் கன்னியாகுமரி, கொல்லம் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் கணித குறியீடுகளும் இடம்பெற்றிருந்தன. இதனால் இது பயங்கரவாதிகளின் சதிச்செயலாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது . இந்நிலையில், தலையில் கேப் அணிந்தபடி சிவப்பு நிற சட்டையுடன் இருக்கும் குற்றவாளியின் மாதிரி படத்தை கேரள காவல்துறை வெளியிட்டுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்