கோவையை சேர்ந்தவர் அருண். இவருடைய நண்பர் சாசங்கன். இருவரையும் கேரள மாநிலம் திருச்சூர், கண்ணூரை சேர்ந்த கும்பல் கடத்தியுள்ளது. பின்னர் திருச்சூர் அருகேயுள்ள கைப்பமங்கலம் பகுதியில் ஒரு எஸ்டேட்டில் அடைத்து வைத்து அருணை தாறுமாறாக தாக்கியுள்ளனர். இந்த கும்பல் தாக்கியதில் அருண் இறந்து போனார்.
இதையடுத்து, செப்டம்பர் 24 ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் டிரைவரிடத்தில் அருண் விபத்தில் சிக்கி காயமடைந்ததாக கூறி, ஆம்புலன்சில் ஏற்றியுள்ளனர். நீங்கள் யாராவது உடன் வாருங்கள் என்று ஆம்புலன்ஸ் டிரைவர் கூப்பிட்ட போது, காரில் வருவதாக அந்த கும்பல் கூறியுள்ளது. பின்னர், ஆம்புலன்சை காரில் பின் தொடர்வது போல போக்கு காட்டி விட்டு, தப்பி விட்டனர்.
உடனடியாக , போலீசாருக்கு ஆம்புலன்ஸ் டிரைவர் தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரின் உத்தரவின் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர், அருணை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.
பின்னர், எஸ்டேட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சாசங்கன் என்பவரை போலீசார் மீட்டனர். அவரிடத்தில் விசாரணை நடத்திய போதுதான், அருண் கொல்லப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, கொலையில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான கண்ணூரை சேர்ந்த சாதிக் என்பவர் மாயமாகி விட்டார். அவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கண்ணூரை சேர்ந்த ஐஸ் பேக்டரி உரிமையாளர் ஒருவருக்கு இரிடியம் கொடுப்பதாக கூறி அருண் 10 லட்சம் ரூபாய் வாங்கியதாகவும் ஆனால், அதை கொடுக்காததால் அவர் கொலை செய்யப்பட்டதாகவும், முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
காலை 9 மணிக்கு வர சொன்ன ரஜினி… 7 மணிக்கே ஆஜரான புகழ்
ஜெயம் ரவி என்னுடைய கிளையன்ட் அவ்வளவுதான்- கொந்தளித்த கென்னிஷா