தேநீர் குடிக்கச் சென்ற பாகன்களால், வளர்ப்பு யானை ஒன்று லாரியில் இருந்து இறங்கி வனப்பகுதியை நோக்கி ஓடிய சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் அக்கரம்மாள் குரூப்ஸ் என்பவர்களுக்கு சொந்தமாக வளர்ப்பு யானைகள் உள்ளன. கோயில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக யானைகள் லாரிகளில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
அந்த வகையில் முத்து என்கிற சேகரன் யானை நேற்று முன்தினம் இரவு மலப்புரத்தில் இருந்து பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
வடக்குமுரி என்ற பகுதி அருகே நேற்று அதிகாலை வந்தபோது, ஓட்டுநர் மற்றும் யானை பராமரிப்பாளர்கள் தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் லாரியை நிறுத்தியுள்ளனர்.
சிறிது நேரத்தில் யானை பாகன்களும் லாரியை விட்டு இறங்கி தேநீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக யானை லாரியில் இருந்து இறங்கி தப்பியது.
தொடர்ந்து அருகில் உள்ள வனப்பகுதியை நோக்கி ஓடிய யானை, அந்த வழியாக சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை தாக்கியது. இதில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும், சில கடைகள் மற்றும் வீடுகளையும் அடித்து சேதப்படுத்தியது. யானை தாக்கியதில் இரண்டு பசு மாடுகள் மற்றும் ஒரு ஆடு ஆகியவை உயிரிழந்தன.
பாகன்கள், உடனடியாக யானையை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் யானை வனப்பகுதிக்குள் நுழைந்து வர மறுத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அந்த யானை சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு மீண்டும் லாரியில் ஏற்றப்பட்டது.
லாரியில் ஏற்றும்போதே யானை சற்று கோபத்துடன் இருந்துள்ளதாகவும், பாகன்கள் அதைக் கட்டுப்படுத்தாமல் விட்டதன் காரணமாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆண்ட்ரியாவின் ஆக்சன் படம் எப்போது ரிலீஸ்?
முதியோர் உதவித்தொகை முறைகேடு : விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்!
பியூட்டி டிப்ஸ்: இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் டிரெஸ் எது தெரியுமா?
ஹெல்த் டிப்ஸ்: உடல் பருமனைக் குறைக்க… இந்த உணவுகளைத் தவிருங்கள்!