கேரளாவில் பெண் மருத்துவர் கொடூர கொலை: வலுக்கும் போராட்டம்!

Published On:

| By christopher

கேரளாவில் சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் ஒருவர் குற்றவாளியால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு இன்றும் (மே 11) மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது.

கேரளா மாநிலம் பூயப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தீப் (வயது 42). ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் மதுபோதைக்கு அடிமையான நிலையில் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இரவு தனது பக்கத்து வீட்டுக் குடும்பத்தினருடன் சந்தீப் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் சந்தீப்பை கைது செய்தனர்.

பின்னர் நேற்று அதிகாலை மருத்துவ பரிசோதனைக்காக கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த 23 வயதான பெண் மருத்துவர் வந்தனா தாஸை, குற்றவாளியான சந்தீப் அங்கிருந்த கத்தரிக்கோலால் மார்பு, கழுத்து உள்ளிட்ட இடங்களில் 6 முறை குத்தினார்.  

kerala doctors protest

இதில் படுகாயமடைந்த மருத்துவர் வந்தனா தாஸ் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட கைதி ஒருவர், மருத்துவரை கொலை செய்த இந்த சம்பவம் கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பெண் மருத்துவரின் உயிரிழப்பு குறித்து கேரளாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வந்தனாவின் பெற்றோரை நேரில் சந்தித்து இரவு இரங்கல் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், இந்த கொலை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

பெண் மருத்துவரின் கொலை குறித்து விசாரணையை தொடங்கிய கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கொல்லம் மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கொட்டாரக்கரா தாலுகா மருத்துவமனையில் நோயாளி ஒருவரால் டாக்டர் வந்தனா தாஸ் கொல்லப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்து அரசு உறுதியான முடிவு எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கேரள அரசு மருத்துவ ஆசிரியர் அமைப்பு, மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரோஷ்னாரா பேகம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

குஜராத்தின் குறைந்த விலை பம்ப் செட்டுகள்: தடுமாறும் கோயம்புத்தூர்!

நாளை முதல் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் குறித்த இரண்டு நாள் பயிற்சி!

ஆட்சி அரியணையில் அமரப்போவது யார் ?: கர்நாடக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!

கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் காக்டெய்ல்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share