கேரளா போலீஸ் துறையில் பணிபுரிபவர்கள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. வயநாட்டில் சிறப்பு படையில் பணி புரிந்தவர் வினீத். 36 வயதான இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு போலீஸ் துறையில் இணைந்துள்ளார். ஆயுதப்படையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்றால் 5 கிலோ மீட்டர் தொலைவை 25 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும். ஆனால், வினீத் 30 விநாடிகளில் இந்த தேர்வில் தோற்றுள்ளார். இதனால், பிட்னெஸ் இல்லையென்று கூறி பணியில் இருந்து நீக்கிவிடுவார்களோ? என்ற அச்சத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் போலீசில் பணி புரிபவர்கள் தற்கொலை செய்வது அதிகரிக்க பல காரணங்கள் சொல்லப்படுகிறது. பணிச்சுமை, மன அழுத்தம் போன்றவை இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதனால், 2016 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இரண்டு டி.எஸ்.பி உள்ளிட்ட 130 போலீஸ் அதிகாரிகள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 300 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். 900 பேர் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது உயரதிகாரிகள் தரும் நெருக்கடி என்று கூறுகிறார்கள். போலீஸ் நிலையங்களில் 8 மணி நேர பணி என்பது சும்மா பேச்சுக்குதான். கிட்டத்தட்ட 12 முதல் 18 மணி நேரம் வரை போலீஸ்காரர்கள் பணி புரிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கேரளாவில் தனது கர்ப்பிணி மனைவியையும், உடல் நலம் பாதித்த பெற்றோரையும் சென்று பார்க்க விடுமுறை கிடைக்காத காரணங்களினாலும் போலீஸ் காரர்கள் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு.
இதனால், போலீஸ் காரர்கள் குடும்ப நிகழ்வுகளில் பங்கேற்க விடுமுறை அளிக்கும்படி சர்க்குலர் அனுப்பப்பட்டாலும் , பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை.
மேலும், மன அழுத்தத்தில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு கவுன்சிலிங், யோகா போன்றவை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மனதளவில் போலீஸ்காரர்கள் வலிமையாக மாறினால்தான் தற்கொலைகள் குறையும் என்றும் சைக்காலஜிஸ்ட்டுகள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்