டெல்லி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 58 பேர் ஆதரவாக வாக்களித்ததால் இன்று (செப்டம்பர் 1) கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்கிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
கட்சியை இரண்டாக உடைத்து கணிசமான எம்.எல்.ஏக்களுடன் பாஜகவில் சேர்ந்தால் முதல்வர் பதவி தருவதாக பாஜகவினர் பேரம் பேசுவதாக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பரபரப்பான புகார் ஒன்றையும் கூறியிருந்தார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கு தலா ரூ20 கோடி பேரம் பேசப்படுவதாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. `
பாரதிய ஜனதா – ஆம் ஆத்மி இடையே தலைநகர் டெல்லியில் மோதல் போக்கு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டெல்லி சட்டமன்றத்தின் ஒரு நாள் சிறப்பு கூட்ட தொடர் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக வசம் தாவவில்லை என்பதை நிரூபிக்க நம்பிக்கை தீர்மானம் கொண்டு வர விரும்புவதாக,
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் அன்றைய தினம் அறிவித்தார்.
இதனையடுத்து டெல்லி சட்டமன்றத்தில் திங்கட்கிழமை நம்பிக்கை தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார்
அதன்படி இன்று(செப்டம்பர் 1) டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
70 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள டெல்லி சட்டசபையில் 62 எம்.எல்.ஏக்கள் ஆம் ஆத்மிக்கும் 8 எம்.எல்.ஏக்கள் பாஜகவிற்கும் உள்ளனர்.
60 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களில் 58 பேர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சபாநாயகரும், எம்.எல்.ஏ ஒருவரும் வெளிநாடு சென்றுள்ளனர். துணை சபாநாயகர் அவையை நடத்தியதால் வாக்களிக்கவில்லை. ஆம் ஆத்மியைச் சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஊழல் புகாரில் சிறையில் உள்ளார்.
இதனால் இந்த 4 பேரும் வாக்களிக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எம்.எல்.ஏக்கள் யாரும் கலந்துகொள்ளாத நிலையில் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கலை.ரா
ரூ.800 கோடி ஆபரேஷன் தாமரை தோல்வி: பாஜக மீது பாயும் ஆம் ஆத்மி!